அவுஸ்திரேலிய ஆளுநர் புதிய உயர்ஸ்தானிகரிடையே சந்திப்பு-
அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படுள்ள சோமசுந்தரம் ஸ்கந்தகுமாருக்கான நியமனக்கடிதத்தை அவுஸ்திரேலிய பொதுநலவாயத்தின் ஆளுநர் நாயகம் சேர் பீட்டர் கொஸ்குரோவ், கன்பெராவிலுள்ள அரச இல்லத்தில் வைத்து இன்று வழங்கிவைத்தார்;. இந்த நிகழ்வில், புதிய உயர்ஸ்தானிகர் மற்றும் ஆளுநர் நாயகம் ஆகியோருக்கும் இடையே கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து ஆளுநர் நாயகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரமும் இடம்பெற்றுள்ளது.
இலங்கையுடன் உறுதியான பங்குதாரராக இருப்போம்-பிரித்தானியா-
இலங்கையில் நல்லிணக்கமும் நீண்ட சமாதானமும் உருவாகியுள்ள நிலையில், இலங்கை அரசுடன் ஒரு உறுதியான பங்குதாரராக நாம் இருப்போம் என பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் பிலிப் ஹமொன்ட் தெரிவித்துள்ளார். நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றமைக்கு வாழ்த்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்த வெற்றிக்கொண்டாட்டதின்போது பிரித்தானிய அரசின் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறினார். இம்முறை நடைபெற்ற தேர்தல் விதமானது, இலங்கை மக்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். பிரதமர் ரணில் விக்கி;ரமசிங்கவுடனும் புதிய அரசாங்கத்துடனும் தொடர்ந்து நல்லுறவைப் பேண எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய அரசுடன் இணைந்து செயற்பட தயார்-சீனா-
புதிய அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. ரணில் விக்ரமசிங்க தலைமையில் வெற்றியடைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், புதிய அரசாங்கத்தின் தலைமையில் இலங்கையின் பொருளாதாரம் உயர் வளர்ச்சியை நோக்கி நகர்ந்துள்ளதாக சீனா நம்புவதாக தெரிவித்துள்ளது. சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சின் பேச்சாளர் ஹ_வா சுனின் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் நடைபெற்று முடிந்த தேர்தல் ஒழுங்குமுறையாக மற்றும் அமைதியாக நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சீனா மற்றும் இலங்கைக்கிடையிலான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்பாரப்பதாகவும் கூறியுள்ளார்.
உதய கம்மன்பிலவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை-
குற்றப்புலனாய்வுத் திணக்களத்திற்கு தன்னை வரவழைத்து 2மணி நேரத்திற்கும் அதிகமாக தன்னிடம் விசாணை மேற்கொண்டதாக பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய நாட்டு பிரஜை ஒருவருடன் இணைந்து நிறுவனம் ஒன்றின் பணத்தை மேசடி செய்ததாக தனக்கெதிராக குற்றம் சுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இன்றுகாலை விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவர் விசாரணைகளின் பின் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார். தன்மீது சேறுபூசும் நோக்கில் பொய்யான முறைப்பாடொன்றை சம்பிக ரணவக்க மேற்கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். தேர்தல் காலத்தில் தன்னை விசாரணைக்காக அழைத்தபோதிலும், தேர்தல் ஆணையாளரின் உத்தரவிற்கிணங்க தேர்தல் முடிந்தபின் இன்று தன்னிடம் விசாரணை மேற்கொண்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சஷி வீரவன்ச நிதி மோசடிப்பிரிவில் ஆஜர்-
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச இன்று பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவில் ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் வழங்கவென அவர் பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவிற்கு சென்றுள்ளார். இதேவேளை சஷி வீரவன்சவிற்கு செஹாசா உதயந்தி ரணசிங்க என்ற பெயரிலும் தேசிய அடையாள அட்டை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சஷி வீரவன்ச இரண்டு முறை நிதிமோசடி விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அவரும் அவரது குடும்பத்தாரும் வசித்து வருகின்ற கடுவலையில் உள்ள இல்லம் மற்றும் அதன் காணி தொடர்பிலேயே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி, லால் காந்த பதவி விலகல்-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் அமைச்சுப் பதவியொன்று கிடைக்கபெறவுள்ளதாக தெரியவருகிறது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட இவர், 61,897 விருப்பு வாக்குகளை பெற்றுகொண்டார். இந்நிலையில், அமைச்சுப்பதவி தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் இ.தொ.கா.பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது. மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் லால் காந்த தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். தேசிய அரசியலில் தன்னை இணைத்துக்கொள்ளும் பொருட்டே தான் இம்முடிவை எடுத்ததாக அவர் கூறினார். லால் காந்த இம்முறை பொதுத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.
இத்தாலி செல்ல முயன்ற யாழ்ப்பாண யுவதி கைது-
அபுதாபி சென்று அதனூடாக இத்தாலி செல்ல முயன்ற யுவதியை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதியோ இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த யுவதியை இன்று நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.