மாறுபட்ட தளத்தில் பணியாற்றுவதற்கான மாபெரும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது-புளொட் தலைவர் த.சித்தார்த்தன்-
எமது மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காகவும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் பணியாற்றுவதற்கான மபெரும் அங்கீகாரம் எனக்கு வழங்ப்பட்டுள்ளதென தெரிவித்துள்ள புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், வாக்களித்த யாழ். கிளிநொச்சி மக்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், விருப்பு வாக்குகள் அடிப்படையில் நான்காவது இடத்தைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,வடக்கு மக்கள் மீண்டுமொரு தடவை எனக்கு மாபெரும் அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள். வடமாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்த அவர்கள் இரண்டு வருட காலப்பகுதிக்குள் என்னை பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்து மாறுபட்ட தளத்தில் அவர்களுக்கு சேவையாற்றுவதற்கான ஆணையை வழங்கியுள்ளார்கள்.
அதனடிப்படையில் எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், சமூக பொருளாதார மேம்பாட்டிற்காகவும் எனது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கடந்த காலத்தில் வன்னி மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தபோது கற்றுக் கொண்ட விடயங்கள் பட்டறிந்த விடயங்களைக் கவனத்திற்கொண்டு எனது சேவையைத் தொடரவுள்ளேன்
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற மிகப்பெரும் பதவி நிலையை உங்கள் சேவைக்காகத் தொடர்ந்தும் அர்ப்பணிப்பேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.