அமைச்சரவையை 30 ஆக வரையறுக்கத் தீர்மானம்-

parliamentபுதிய அரசாங்கத்தின் அமைச்சரவையை 30 ஆக வரையறுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கைக்கு மேல் அமைச்சரவை அங்கத்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமாயின் பாராளுமன்ற அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர், அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார். தேசிய அரசாங்கத்தின் தேவை கருதி அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரிக்கும் தேவையேற்படின், அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அடுத்துவரும் சில தினங்களில் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையை நியமிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவைக்கான அங்கத்தவர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சி நிறைவேற்றுக் குழுவிலிருந்து ரி.பி. ஏக்கநாயக்க நீக்கம்-

ekanaikeசிறீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுவிலிருந்து தாம் நீக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு கடிதமொன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்க குறிப்பிட்டார். சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுவிலிருந்து இதுவரை நான்கு சிரேஷ்ட உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சிறீலலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால ஆகியோரின் கையொப்பங்களுடன் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரி.பி. ஏக்கநாயக்க தெரிவித்தார். எஸ்.எம். சந்திரசேன, பவித்ரா வன்னியாராச்சி, குமார வெல்கம ஆகியோருடன் தாம் கட்சியின் நிறைவேற்றுக் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார். தாம் உட்பட நால்வரும் கடந்த தேர்தலில் அவரவர் போட்டியிட்ட மாவட்டங்களில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளதாக தெரிவித்த ரி.பி. ஏக்கநாயக்க, நிறைவேற்றுக் குழுவிலிருந்து தாங்கள் நீக்கப்பட்டமைக்கான காரணம் தெரியவரவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இலங்கை மக்களின் நேர்மையான பங்களிப்பு குறித்து இத்தாலி ஆச்சரியம்-

italyஜனநாயக தேர்தல் ஒன்றுக்காக இலங்கை மக்கள் வழங்கிய நேர்மையான பங்களிப்பு தொடர்பாக தாம் ஆச்சரியம் அடைந்ததாக இலங்கைக்கான இத்தாலியின் புதிய தூதுவர் பாபலோ ஒன் ட்ரே பார்டோலி தெரிவித்துள்ளார். இலங்கைக்கான மூன்று புதிய தூதுவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று சந்தித்து தங்களின் சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர். இலங்கைக்கான இத்தாலியின் புதிய தூதுவர் பாபலோ ஒன் ட்ரே பார்டோலி உட்பட அமெரிக்க மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் ஜனாதிபதியை சந்தித்து தங்களின் சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர். அந்த நாடுகளுடனான வலுவான தொடர்புகள் குறித்து அவதானம் செலுத்திய ஜனாதிபதி, வர்த்தக, முதலீட்டு மற்றும் சுற்றுலாத் துறைகளைத் தொடர்ந்தும் வலுப்படுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டினர். சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தல் தொடர்பில் புதிய தூதுவர்கள் ஜனாதிபதிக்கு வாழ்த்துத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடாகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பஸ் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து-

ewrererகளுத்துறை மாவட்டம் ஹொரணையிலிருந்து ஹட்டன் வழியாக நுவரெலியா நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று, ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் செனன் வூட்லேண்ட் பகுதியில் வைத்து வீதியைவிட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில், குறித்த பஸ்ஸில் பயணித்த 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த பஸ்ஸில் 30க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். பஸ் சாரதியின் கவனயீனமே இவ்விபத்துக்கு காரணமாகும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.