வடக்கில் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் நியமனத்தில் அநீதி-(படம் இணைப்பு)

mullaiவிவசாய கமநல சேவைத் திணைக்களத்தின் கீழுள்ள பதவிகளுள் ஒன்றான விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களாக 365பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கிலே இருக்கின்ற விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காகவே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் இவர்களுள் 29பேர் மாத்திரமே தமிழர்களாவர். மிகுதி 336பேருமே தென்பகுதியைச் சேர்ந்த சிங்களவர்களாவர். அதாவது இவர்கள் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை கண்டி மற்றும் கொழும்பு போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

தமிழ்மொழி தெரியாத இவர்களுக்கு இங்கு நியமனம் வழங்கப்பட்டிருப்பது பொருத்தமானதாக அமையாது. இதற்கான பரீட்சைகள் நடாத்தப்பட்டு தேசிய அடிப்படையிலான வெட்டுப்புள்ளிகள் ஊடாக இவர்களைத் தெரிவுசெய்திருப்பதன் காரணமாக இதற்கு தெரிவான தமிழர்களின் தொகை மிகவும் குறைவாகவுள்ளது. அத்துடன் நியமிக்கப்பட்டிருக்கும் சிங்களவர்கள் இங்கு நிரந்தமாக இருக்கப்போவதில்லை. இவர்கள் நியமனம் பெற்றுக்கொண்டு தங்கள் பிரதேசங்களுக்கு மாற்றலாகிச் சென்றுவிடுவார்கள். இந்த நியமனத்தினால் வடக்கில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு பயன் குறைவு. மேலும் தொண்ணூறு வீதமாக தமிழர்கள் வாழும் இப்பகுதியில் இருபது வீதம் மாத்திரம் தமிழர்கள் நியமிக்கப்படுவது என்பது மிகவும் பிழையான அணுகுமுறையாகும். ஆகவே இந்த நியமனத்தைக் கண்டித்து முல்லைத்தீவைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகள் இந்த நியமனத்திற்கெதிராக இன்றுமுற்பகல் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

மாவட்ட அடிப்படையில் வெட்டுப்புள்ளி வேண்டும். எமது வேலைவாய்ப்பு எமக்கே வேண்டும், எமது மொழி தெரியாத உத்தியோகத்தர் எமக்கு வேண்டாம், மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் வேலைவாய்ப்பினை வழங்கு, பாதிக்கப்பட்ட மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளியை குறை, வேலைவாய்ப்பினை மாவட்ட இளைஞர்களுக்கு வழங்கு போன்ற கோசங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியபடி இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு.கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களும் கலந்துகொண்டிருந்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மாவட்ட அரசாங்க அதிபரின் ஊடாக ஜனாதிபதி அவர்களுக்கான மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதுடன், அதன் பிரதி கமநல ஆணையாளர் நாயகம் எம்.ஏ.எஸ் வீரசிங்க அவர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

mullai