உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை!- வழக்கறிஞர் கே.எஸ். ரட்ணவேல்
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் சற்றும் நம்பிக்கை இல்லை. கடந்த கால அனுபவங்களே இந்த நிலைப்பாட்டுக்கு காரணம்.
இலங்கையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்படுவதை ஆதரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில் இவ்வாறான கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், அதற்கிடையில் அமெரிக்கா இப்படியான நிலைப்பாட்டை எடுத்திருப்பது கவலையளிப்பதாகவும்.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட பல ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் வெற்றியளிக்கவில்லை.
சர்வதேச பிரதிநிதிகளின் கண்காணிப்பில் உள்நாட்டில் நடந்துள்ள விசாரணை ஆணைக்குழுக்கள் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவிதமான தீர்வையும் வழங்கவில்லை
பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் அமலில் உள்ள சூழ்நிலையில், பெருமளவிலான அரசியல் கைதிகள் இன்னும் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்.
பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் விசாரணை ஆணைக்குழுக்களில் ஆஜராகி வாதிட்டு வந்துள்ள மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ரட்ணவேல் பிபிசியிடம் தெரிவித்தார்.
இரண்டு கட்சிகள் மாத்திரம் சேர்ந்து அமைப்பது தேசிய அரசாங்கமாகுமா? மனோ கணேசன்
ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் கூட்டிணைவது மாத்திரம் தேசிய அரசாங்கம் ஆகிவிட முடியாது. தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு உரிய இடங்கள் வழங்கப்பட்டால்தான் இது தேசிய அல்லது தேசிய ஐக்கிய அரசாங்கமாக முடியும்.
அதேபோல் எப்பாடுபட்டாவது அமைச்சு பதவிகளை கைப்பற்றிகொள்வது என்பது தேசிய அரசாங்கத்தின் முன்னுரிமை பட்டியலில் முதலிடம் பிடிக்க முடியாது. இது தேசிய அரசாங்கமாக அழைக்கப்படலாம்.
ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்து கொண்டால்தான், இது தேசிய ஐக்கிய அரசாங்கமாக முடியும். இங்கே சிலர் தேசிய அரசாங்கம், தேசிய ஐக்கிய அரசாங்கம் ஆகிய இரண்டு சொற்களையும் போட்டு குழப்புகிறார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.தேசிய அரசாங்கம் தொடர்பில் கருத்து தெரிவத்த போது மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இங்கே இப்போது சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இருக்கின்றன. வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களை குறிப்பாக மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாக தமிழ் முற்போக்கு கூட்டனி இருகின்றது. முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவை உள்ளன.
ஆனால், வடக்கில் கிழக்கு மாகாணங்களில் நிரந்தரமாக வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியான தமிழ் தேசிய கூட்டமைப்பை உள்வாங்காமல் இதை தேசிய ஐக்கிய அரசு என்ற அழைப்பது கேலிக்கூத்து.
இப்போது 170 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கின்றது என்பதானால் இதை தேசிய அரசாங்கம் என்று அழைக்கலாம். ஆனால், நாளுக்கு நாள் தேசிய அரசாங்கத்தின் முன்முதல் நோக்கம் அமைச்சு பதவிகளை பிரித்துக்கொள்வதா என்ற சந்தேகம் இப்போது மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அழுத்தங்களை தந்து பதவிகளை தேடிப்பெறுவதில் பெருமுனைப்பு காட்டப்படுகின்றது.
இந்த சூழ்நிலையை நாங்கள் அவதானித்து வருகிறோம். இந்த பெருமுனைப்புக்கு தமிழ், முஸ்லிம் கட்சிகள் தங்களுக்கு உரிய இடங்களை விலையாக கொடுக்க முடியாது. எங்களுக்கு உரியது எங்களுக்கு வேண்டும். எங்கள் கருத்தை அரசு தலைவர்களுக்கு தெரிவித்து உள்ளோம்.
தேசிய அரசாகட்டும், தேசிய ஐக்கிய அரசாகட்டும், ஐக்கிய தேசிய முன்னணி அரசாகட்டும், எந்த அரசாங்கமாக இருந்தாலும், மலையகத்தில் காணி உரிமை, தனிவீட்டு உரிமை, மலையகத்தில் மேலதிக பிரதேச சபைகள் உருவாக்கம், வடகிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு உரிய அதிகாரப்பகிர்வு, தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரவாத தடை சட்ட நீக்கம், அரச நிர்வாக இயந்திரத்தில் சட்டபூர்வ தமிழ் மொழி பாவனை ஆகியவையே தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னுரிமை பட்டியலில் இடம்பெறும் பிரதான விடயங்களாகும்.
இவற்றை ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகளுடனும், அரசில் உள்ள முற்போக்கு சக்திகளுடனும் இணைந்து நாம் முன்னெடுப்போம். இவற்றை தவிர இன்னமும் பற்பல விவகாரங்களையும் நாங்கள் பட்டியலிட்டு வைத்துள்ளோம். பதவி வரப்பிரசாதங்களை பெற்றுக்கொண்டு மக்களை மறந்து விட்டு தேர்தல் நேரத்தில் திடீரென விழித்து எழும் கலாச்சாரத்தை நாம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். இந்த நிரந்தர தூக்கம், திடீர் விழிப்பு என்பதெற்கெல்லாம் இனி இடமில்லை.