சர்வதேச விசாரணை கோரி காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் போர்க்காலத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் மன்னார் நகரில் ஞாயிறன்று கூடி தங்களின் உறவுகளை கண்டுபிடிப்பதற்கு ஏதுவாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியிருக்கின்றனர்.
ஆட்கள் காணாமல் ஆக்கப்படுதலுக்கு எதிரரன சர்வதேச தினத்தை ஒட்டி இந்த நிகழ்வு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட் தந்தை ஜெபமாலையின் தலைமையில் நடைபெற்றது.வடக்கு-கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் சங்கத்தினரும் மன்னார் பிரஜைகள் குழுவினரும் இணைந்து இந்த நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தன.
காணாமல்போனவர்கள் தொடர்பில் உள்நாட்டில் பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டு, சாட்சியங்கள் அளிக்கப்பட்டுள்ள போதிலும் அரசாங்கத்தினால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று அந்த அமைப்புகள் கூறியுள்ளன.
காணாமல் ஆக்கப்பட்வர்கள் எவ்வாறு காணாமல் போயுள்ளார்கள் என்பதற்கான ஆவணங்கள் சர்வதேச நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ள போதிலும் அவற்றால் பயனேதும் ஏற்படவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை என்றும் உறவினர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாகவே சர்வதேச விசாரணை ஒன்றை தாங்கள் வலியுறுத்துவதாக இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அருட்தந்தை ஜெபமாலை தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த காணாமல்போனவர்களின் உறவினர்கள், தமக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று கண்ணீர் சிந்தியபடி கோரிக்கை விடுத்தனர்.