கூட்டமைப்பு தலைவர்களுடன் கலந்துரையாட ஜனாதிபதி அழைப்பு

UNP PAஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்புக்கு கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவங்க குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகளின் விருப்பத்திற்கு ஏற்ப எதிர்கட்சித் தலைவரை நியமிக்க ஜனாதிபதி இணக்கம் -விமல் வீரவன்ச

vimalஎதிர்கட்சிகளின் விருப்பத்திற்கு ஏற்ப எதிர்கட்சித் தலைவரை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இன்று (31) காலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டுக் கட்சித் தலைவர்கள் சந்திப்பின்போது ஜனாதிபதி தமது கோரிக்கைக்கு அனுமதி அளித்ததாக அவர் கூறியுள்ளார்.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் தமது எதிர்ப்பை வெளியிட்டதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஏற்படும் இழப்பு தொடர்பிலும் இங்கு ஜனாதிபதிக்கு விசேடமாக எடுத்துக்கூறியதாக விமல் தெரிவித்துள்ளார்.

08ஆவது பாராளுமன்றம் நாளை கூடுகிறது உறுப்பினர்கள் விரும்பிய ஆசனத்தில் அமரலாம்
 
parliamentஇலங்கையின் 08ஆவது பாராளுமன்றம் நாளை கூடும்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் விரும்பிய ஆசன வரிசையில் அமர முடியுமென பாராளுமன்ற செயலாளர் நாயகம் டபிள்யு.பி.டி. தசநாயக்க தெரிவித்தார்.

சபாநாயகர் தெரிவுக்குப் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசன வரிசைகள் நிரந்தரமாக உறுதி செய்யப்படுமென்றும் அவர் கூறினார்.நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு இலங்கையின் 08வது பாராளுமன்றத்தின் சம்பிரதாய அமர்வு ஆரம்பமாகும். நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுபாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் அன்றையதினம் காலை கூடி சபாநாயகரை தெரிவு செய்வர்.

சபாநாயகர் பதவிக்காக ஒரு பெயர் சிபாரிசு செய்யப்படுமாயின் அவர் ஏற்றுக்கொள்ளப்படுவார். ஆனால் இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோரின் பெயர்கள் சிபாரிசு செய்யப்படும் சந்தர்ப்பத்தில் தேவையேற்படின் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படலாமென்றும் செயலாளர் நாயகம் தசநாயக்க கூறினார்.

சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்வர்.

அதனைத் தொடர்ந்து சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர்களைக் தெரிவு செய்வார். தேவையேற்படின் இதற்காக இரகசிய வாக்கெடுப்பொன்று நடத்தப்படலாமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பின்னர் சபை அமர்வு பிற்பகல் 3 மணிவரை ஒத்திவைக்கப்படும். 03 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வைபவரீதியான அமர்வு ஆரம்பமாகும். இதில் ஜனாதிபதி, நாட்டுத் தலைவரென்ற வகையில் கொள்கை விளக்க உரையாற்றுவார்.

பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிரேஷ்ட அரசியல்வாதி என்ற வகையில் அவருக்கு சபையின் முதல்வரிசையில் ஆசன ஒதுக்கீடு வழங்குவதற்கான வாய்ப்பு அதிகமென்றும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகமான தசநாயக்க கூறினார்