சர்வதேச விசாரணை மூலமாகத் தான் எமக்கு ஒரு நியாயம் கிடைக்கமுடியும்’ – புளொட்

Sithar ploteஇலங்கையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் போர்க்கால குற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் நடத்தக்கூடிய உள்ளக விசாரணைக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக அமெரிக்கா அண்மையில் தெரிவித்திருந்தது.
ஆனால்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான புளொட் தெரிவித்துள்ளது.‘உள்ளக விசாரணைகள் மூலம் அறிக்கைகள் வரலாம்… ஆனால் ஒரு நியாயம் கிடைக்கும் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை’ என்று புளொட் அமைப்பின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.‘உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்கின்ற நிலையில் தமிழ் மக்கள் இல்லை’ என்றும் அவர் கூறினார்.
போர்க்காலக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் பிரசாரம் செய்துவந்திருந்ததாகவும் சித்தார்த்தன் நினைவுபடுத்தினார்.
இந்தப் பிரச்சனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் அதிகாரபூர்வமான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்று கூறிய புளொட் தலைவர், சர்வதேச விசாரணை தேவை என்கின்ற நிலைப்பாட்டிலேயே தமது கட்சி இருப்பதாகவும் கூறினார்.
‘போரில் இழப்புகளை சந்தித்த மக்களுக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டுமாக இருந்தால், அது நிச்சயமாக ஒரு சர்வதேச விசாரணை மூலமாகத் தான் கிடைக்கமுடியும்’ என்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்தார்