தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்-ஜனாதிபதி-
அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்துவோர் மீது அரசியல் கட்சி தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 08வது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று பிற்பகல் 03மணிக்கு ஆரம்பமானபோது விஷேட உரையாற்றிய ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் ஐக்கியம் பாதுகாக்கப்படும் எனவும் முப்படைகளின் தளபதி, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் அதற்கான பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாகவும், தேசிய பாதுகாப்பு தொடர்பில் அனைவரும் தனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இலங்கை பாராளுமன்றில் ஒரு பிரதான கட்சி 32 வருடங்களாகவும் மற்றொரு பிரதான கட்சி 31 வருடங்களாகவும் ஆட்சி செய்துவந்த நிலையில், இன்று கூடியுள்ள புதிய பாராளுமன்றம் இலங்கை அரசியல் வரலாற்றில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். யுத்த காலத்தில் தேசிய அரசாங்கத்தின் தேவை காணப்பட்ட போதும், அளும் கட்சி எதிர்க்கட்சி அரசியலே முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும் ஜனவரி 08ல் தான் பதவியேற்ற பின் சமரச தேசிய அரசாங்கம் உருவாவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். இதுவரை இலங்கையர்கள் என்ற வகையில் அனைவரும் ஒன்றிணையும் விதமான அரசியல் யாப்பு ஒன்றறை உருவாக்க முடியாது போனதாக தெரிவித்த ஜனாதிபதி புதிய ஆட்சியில் விருப்பு வாக்கு முறை இல்லாத தேர்தல் திருத்த சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அதற்கான அடிப்படைத் தேவை
பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் போன்றவை ஒன்றிணைந்து இதனை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை போன்று யுத்தத்தால் பாதிப்புக்களை சந்தித்த பல நாடுகள் பொருளாதார ரீதியில் விரைவாக முன்னேற்றம் கண்டன. இலங்கையில் அவ்வாறானதொரு முன்னேற்றம் ஏற்படாமைக்கு இரண்டு கட்சிகளை அடிப்படையாக கொண்ட ஆட்சி முறை காணப்பட்டது. எனவேதான் சமரச தேசிய அரசாங்கம் என்ற புதிய திட்டத்தை நாம் முனனெடுத்துள்ளோம். புதிய பாராளுமன்றில் உருவாக்கப்படும் சமரச அரசாங்கத்தின் ஒழுங்குபத்திர தயாரிப்பின் போது கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்வைக்கப்பட்ட, மக்களின் அங்கீகாரம் கிடைத்த மைத்திரி ஆட்சி – நிலையான நாடு என்ற தொனிப்பொருள் அடிப்படையாக உள்ளது. அதனோடு கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ள விடயங்கள்குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கையை அபிவிருத்தி செய்யும் போது இயற்கை மீது கூடிய கவனம் செலுத்தப்படும். இயற்கைக்கு எதிரான அபிவிருத்திகளை முன்னெடுத்த உலக நாடுகள் இன்று எதிர்நோக்கியுள்ள விளைவுகளை நம்மால் காணக் கூடியதாக உள்ளது. அவ்வாறான நிலையை தவிர்த்து இயற்கையை பாதுகாத்துக் கொண்டு இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் நாம் உலக மயமாதலின் கீழ் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். உலகின் அனைத்து நாடுகளும் நமக்கு அவசியம். அவர்களிடம் இருந்து பரிமாறிக் கொள்ள வேண்டிய விடயங்கள் நிறை உண்டு. அதனால் எமது வெளிவிவகார கொள்கையில் வெளிப்படைத்தன்மை, நட்புறவு போன்றவை அடிப்படை அம்சங்களாக உள்ளன. எனது அரசாங்கம் இப்போதிலிருந்து ஆசிய நிலையத்தில் மத்திய நிலை வெளிவிவகார கொள்கையை கடைபிடிப்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தும். கடந்த காலங்களில் எமது வெளிவிவகார கொள்கை ஜெனீவா என்ற சொல்லுக்குள் முடக்கப்பட்டது. ஜனவரி 8ம் திகதி நான் ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கை தொடர்பில் சர்வதேசத்தில் காணப்பட்ட அதிருப்தி நிலையை சாதகமாக்கிக் கொள்ள முடிகிறது. இந்த நிலையை எட்ட சர்வதேச சமூகத்தின் நம்பிக்கை, சமரசம், ஒத்துழைப்பு என்பன முக்கியம். கடந்த 07 மாதங்களுக்குள் இலங்கை சர்வதேசத்தின் நன்மதிப்பை வென்றுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். நாட்டின் அபிமானம் மற்றும் நற்பெயருக்கு நன்மை ஏற்படும் விதத்தில் எமது அரசாங்கம் செயற்பட்டுள்ளது. இலங்கையில் தற்பொழுது நல்லாட்சியுடன் கூடிய சமரச அரசாங்கம் ஏற்பட்டுள்ளதால் வெளிநாட்டிலுள்ள நிபுணத்துவம் பெற்றவர்கள் தமது தாய் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும். அவர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும். வெளிநாடு சென்றவர்கள் நாடு திரும்புவது தொடர்பில் ஆராய எமது அரசாங்கம் விசேட பிரிவொன்றை ஏற்படுத்தும் என்றார்.