Header image alt text

அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 30வது நினைவுதினம் அனுஷ்டிப்பு-(படங்கள் இணைப்பு)

P1090174இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்றுக்காலை (02.09.2015) அனுஷ்டிக்கப்பட்டது.

30வது நினைவுதின நிகழ்வுகள் யாழ் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் வலி தென்மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், தர்மலிங்கம் நினைவுக்குழுவின் தலைவருமான திரு.கௌரிகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மலரஞ்சலியும் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டு நினைவுக் கூட்டமும் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரன் (அமல் மாஸ்டர்), வட மாகாணசபை உறுப்பினர்களான பா.கஜதீபன், ஜி.ரி. லிங்கநாதன், கந்தையா சிவநேசன் (பவன்), வலி தெற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திரு. பிரகாஸ், ஆகியோர் உரையாற்றினார்கள்.

Read more

அமைச்சரவை அதிகரிப்பு பிரேரணை பாராளுமன்றில் நிறைவேற்றம்-

parliament8வது பாராளுமன்றில் அமையவுள்ள தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையை அதிகரிக்க கோரி பாராளுமன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சமர்ப்பித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று முற்பகல் தொடக்கம் குறித்த பிரேரணை விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், மாலை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அதன்போது பிரேரணைக்கு ஆதரவாக 143 பேரும் எதிராக 16 பேரும் வாக்களித்ததுடன் 63 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அமைச்சரவையை அதிகரிக்க அனுமதி கிடைத்துள்ளதால் நாளை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அவுஸ்திரேலியா கடற்படை கூட்டுப் பயிற்சி-

lanka australiaஇலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இணைந்து கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. அவுஸ்திரேலிய கடற்படையின் மெல்பர்ன் கப்பல் மற்றும் இலங்கை கடற்படையின் சாகர மற்றும் சமுத்ர கப்பல்கள் இணைந்து கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் பிராந்திய கடற்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இணைந்து பயனுள்ள மற்றும் திறமையான பங்களிப்பை செய்கின்றது. இருநாட்டு கடற்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பு போன்று உள்ளக செயன்முறை திறமைகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது இந்த இணைந்த கூட்டு கடற்படை பயிற்சியின் நோக்கமென தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் ரயிலில் மோதி இளைஞர் உயிரிழப்பு-

railwayயாழ். புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று பகல் 2மணியளவில் புங்கங்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. புத்தூர் வடக்கு புத்தூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் கஜீபன் (வயது 21) என்பவரே பலியாகியுள்ளார். புங்கங்குளம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் மறைவாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அந்த இடத்திலிருந்து இளைஞர் குதித்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

கோத்தபயவிடம் 4 மணி நேரம் விசாரணை-

gotabaya......முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் பாரிய மோசடி தடுப்பு ஜனாதிபதி ஆணைக்குழு 4 மணித்தியாலங்கள் விசாரணை மேற்கொண்டுள்ளது. நிதி மோசடி சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக கோட்டாபயஇன்றுகாலை 9.30மணிக்கு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். பகல் 1.30 மணிவரை அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் நாளையும் ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு கோட்டாபயவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டாபய தவிர மேலும் 09 பேர் இன்று பாரிய மோசடி தடுப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், அவர்களையும் நாளை மீண்டும் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவாக அநுரகுமார திஸாநாயக்க-

anura kumara8வது பாராளுமன்றின் எதிர்க்கட்சி பிரதம கொரடா பதவிக்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பதவிக்கு போட்டியிட வேறு எவரது பெயரும் பரிந்துரை செய்யப்படவில்லை என்பதால் அநுரகுமார திஸாநாயக்கவை எதிர்க்கட்சி பிரதம கொரடாவாக சபாநாயகர் விரைவில் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் மோடி சந்திரிகா சந்திப்பு-

chandrika modi metமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். புதுடெல்லியில் நடைபெறும் அனைத்துலக இந்து – பௌத்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா சென்றுள்ள சந்திரிக்கா மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த மாநாடு, இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சித் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவு-

sampanthanஎதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு தலைவர் இரா.சம்பந்தனை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார் இன்றைய பாராளுமன்ற அமர்வின்போதே சபாநாயகர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் எந்த ஒரு வேண்டுகோளும் விடுக்கப்படவில்லை எனவும் சபாநாகர் கருஜயசூரிய குறிப்பிட்டார். அதற்கமைய இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் எட்டாவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு தலைவர் இரா சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை அதிகரிப்பு தொடர்பான பிரேரணை மீது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள், தேசிய நலன் என்று அரசாங்கம் கொண்டுவரும் தவறான சட்டதிட்டங்களை எதிர்போம். தமிழ் தேசியப் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளோம். நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் விசுவாசமாக இருப்போம்.

Read more

விழிநீர் அஞ்சலிகள்

Posted by plotenewseditor on 3 September 2015
Posted in செய்திகள் 

விழிநீர் அஞ்சலிகள்
photoதிருகோணமலை மூதூர் கடற்கரைச்சேனையைப் பிறப்பிடமாகவும், நாயன்மார்திடல், தம்பலகாமத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. கார்த்திகேசு திருநாவுக்கரசு அவர்கள் 01.09.2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானர் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
 
அன்னார் 1980களில் திருகோணமலை மாவட்டத்தில் காந்தீயத்தின் முக்கிய செயற்பாட்டாளராகவும், மூதூர் பகுதி காந்தீய பொறுப்பாளராகவும், திருமலை மாவட்டத்தில் புளொட்டின் ஆரம்பகால உறுப்பினராகவும், மூதூர்ப் பகுதி அமைப்பாளராகவும் செயற்பட்டவர். 
 
1980களில் இருந்தே காந்தீயம், புளொட் ஆகியவற்றின் செயற்பாடுகளில் தன்னையும் இணைத்துக் கொண்டு தனது குடும்பத்தையும் பங்கெடுக்கச் செய்த அமரர் திருநாவுக்கரசு அவர்கள் மறைந்த தோழர் பார்த்தன் (இரா.ஜெயச்சந்திரன்) அவர்களோடு தோளோடு தோள்நின்று செயற்பட்டவர். அன்னாரின் இழப்பு எமது அமைப்புக்கும் தமிழ் சமூகத்திற்கும் ஒரு பேரிழப்பாகும். 
 
அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினர், உற்றார், உறவினர் நண்பர்களுடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந் துயரினைப் பகிர்ந்து கொண்டு எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
 
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
 
குறிப்பு- அன்னாரின் பூதவுடல் தம்பலகாமம் நாயன்மார்திடலில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதிக் கிரியைகள் இன்றுமாலை 4மணியளவில் இடம்பெறவுள்ளது. 
 
தொடர்புகட்கு : திருமதி தி. வள்ளிநாயகி (மனைவி) – 0094755355631 0094755355621 
திரு. கோபகன் (கோபு) (மகன்) 0094773215597