அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 30வது நினைவுதினம் அனுஷ்டிப்பு-(படங்கள் இணைப்பு)
இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்றுக்காலை (02.09.2015) அனுஷ்டிக்கப்பட்டது.
30வது நினைவுதின நிகழ்வுகள் யாழ் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் வலி தென்மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், தர்மலிங்கம் நினைவுக்குழுவின் தலைவருமான திரு.கௌரிகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மலரஞ்சலியும் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டு நினைவுக் கூட்டமும் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரன் (அமல் மாஸ்டர்), வட மாகாணசபை உறுப்பினர்களான பா.கஜதீபன், ஜி.ரி. லிங்கநாதன், கந்தையா சிவநேசன் (பவன்), வலி தெற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திரு. பிரகாஸ், ஆகியோர் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்வின்போது வி. தர்மலிங்கம் அவர்களின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் செல்லும் வீதிக்கு தர்மலிங்கம் வீதி என்று பெயர் சூட்டி அந்த பெயர்ப் பலகையை வலி தெற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திரு. பிரகாஸ் அவர்கள் திரைநீக்கம் செய்துவைத்தார். இந்நிகழ்வில் பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக யாழ். கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள அன்னாரது உருவச்சிலைக்கு கல்லூரியின் பீடாதிபதி திரு. அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலியைத் தொடர்ந்து இரங்கல் கூட்டமும் இடம்பெற்றது.
இதன்போது, கல்லூரியின் பீடாதிபதி திரு.அமிர்தலிங்கம், லயன் வைத்தியக் கலாநிதி தியாகராஜா, புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரன், வட மாகாணசபை உறுப்பினர்கள் ஜி.ரி லிங்கநாதன், கந்தையா சிவநேசன் (பவன்), கல்லூரியின் மாணவர் ஒருவர் ஆகியோர் உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் கல்வியியற் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியரும், பெற்றோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அமரர் வீ. தர்மலிங்கம் அவர்களது நினைவாக நண்பகல் ஏழாலை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திரு. திருஞானசம்பந்தர் அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்வும் நினைவுப் பேருரையும் இடம்பெற்றது. நினைவுப் பேருரையை கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாசாலையின் முன்னைநாள் அதிபர் திரு செல்வகுமாரன் அவர்கள் நிகழ்த்தினார். இதேவேளை அமரர் வீ. தர்மலிங்கம் அவர்களது நினைவாக தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்திலும் நண்பகல் அன்னதானம் வழங்கப்பட்டது.