அமைச்சரவை அதிகரிப்பு பிரேரணை பாராளுமன்றில் நிறைவேற்றம்-

parliament8வது பாராளுமன்றில் அமையவுள்ள தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையை அதிகரிக்க கோரி பாராளுமன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சமர்ப்பித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று முற்பகல் தொடக்கம் குறித்த பிரேரணை விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், மாலை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அதன்போது பிரேரணைக்கு ஆதரவாக 143 பேரும் எதிராக 16 பேரும் வாக்களித்ததுடன் 63 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அமைச்சரவையை அதிகரிக்க அனுமதி கிடைத்துள்ளதால் நாளை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அவுஸ்திரேலியா கடற்படை கூட்டுப் பயிற்சி-

lanka australiaஇலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இணைந்து கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. அவுஸ்திரேலிய கடற்படையின் மெல்பர்ன் கப்பல் மற்றும் இலங்கை கடற்படையின் சாகர மற்றும் சமுத்ர கப்பல்கள் இணைந்து கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் பிராந்திய கடற்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இணைந்து பயனுள்ள மற்றும் திறமையான பங்களிப்பை செய்கின்றது. இருநாட்டு கடற்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பு போன்று உள்ளக செயன்முறை திறமைகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது இந்த இணைந்த கூட்டு கடற்படை பயிற்சியின் நோக்கமென தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் ரயிலில் மோதி இளைஞர் உயிரிழப்பு-

railwayயாழ். புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று பகல் 2மணியளவில் புங்கங்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. புத்தூர் வடக்கு புத்தூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் கஜீபன் (வயது 21) என்பவரே பலியாகியுள்ளார். புங்கங்குளம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் மறைவாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அந்த இடத்திலிருந்து இளைஞர் குதித்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

கோத்தபயவிடம் 4 மணி நேரம் விசாரணை-

gotabaya......முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் பாரிய மோசடி தடுப்பு ஜனாதிபதி ஆணைக்குழு 4 மணித்தியாலங்கள் விசாரணை மேற்கொண்டுள்ளது. நிதி மோசடி சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக கோட்டாபயஇன்றுகாலை 9.30மணிக்கு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். பகல் 1.30 மணிவரை அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் நாளையும் ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு கோட்டாபயவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டாபய தவிர மேலும் 09 பேர் இன்று பாரிய மோசடி தடுப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், அவர்களையும் நாளை மீண்டும் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவாக அநுரகுமார திஸாநாயக்க-

anura kumara8வது பாராளுமன்றின் எதிர்க்கட்சி பிரதம கொரடா பதவிக்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பதவிக்கு போட்டியிட வேறு எவரது பெயரும் பரிந்துரை செய்யப்படவில்லை என்பதால் அநுரகுமார திஸாநாயக்கவை எதிர்க்கட்சி பிரதம கொரடாவாக சபாநாயகர் விரைவில் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் மோடி சந்திரிகா சந்திப்பு-

chandrika modi metமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். புதுடெல்லியில் நடைபெறும் அனைத்துலக இந்து – பௌத்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா சென்றுள்ள சந்திரிக்கா மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த மாநாடு, இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.