எதிர்க்கட்சித் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவு-
எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு தலைவர் இரா.சம்பந்தனை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார் இன்றைய பாராளுமன்ற அமர்வின்போதே சபாநாயகர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் எந்த ஒரு வேண்டுகோளும் விடுக்கப்படவில்லை எனவும் சபாநாகர் கருஜயசூரிய குறிப்பிட்டார். அதற்கமைய இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் எட்டாவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு தலைவர் இரா சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை அதிகரிப்பு தொடர்பான பிரேரணை மீது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள், தேசிய நலன் என்று அரசாங்கம் கொண்டுவரும் தவறான சட்டதிட்டங்களை எதிர்போம். தமிழ் தேசியப் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளோம். நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் விசுவாசமாக இருப்போம்.
வாக்களித்த வடக்கு கிழக்கு மக்களுக்கும் திருகோணமலை மக்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றேன். தமிழ் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது எமது கடமை. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவை அதிகரிப்பு என்ற திட்டம் சிறந்த உதாரணம் அல்ல. கடந்த காலங்களைப் போன்று அமைச்சரவை கணக்கின்றி அதிகரித்துச் சென்றது போன்ற அரசியல் கலாசாரத்தை ஊக்குவிக்கக் கூடாது. இந்தியாவில் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் நிலையில் அமைச்சரவை 30ற்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மொத்தம் 70பேர். இலங்கை தமது அயல்நாடான இந்தியாவை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். பாராளுமன்றில் புதிய இளம் தலைவர்கள் உள்ளனர். மாகாண சபையில் முதலமைச்சர் பதவி வகித்தவர்களும் உள்ளனர். அவர்களுக்கு ஏன் பிராந்திய அதிகாரத்தை அதிகரிக்கக் கூடாது?. மாகாணங்களுக்கு அதிகாரங்களை அதிகரித்து ஆளுநரை பலப்படுத்தினால் மக்கள் மத்தியில் அபிவிருத்தி முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் கூறினார்.