மலையக வரலாற்றில் திருப்புமுனை – அமைச்சர் திகாம்பரம்

malyagamஇருநூறு வருடங்களாக தோட்ட மக்கள் என்றும் பெருந்தோட்ட மக்கள் என்றும் நிர்வாக பெயர் கொண்டு அழைக்கப்பட்ட மலையக சமூகத்தின் அவலத்தை நீக்கி லயத்து வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க புதிய கிராமங்களை உருவாக்கும் வேலைத்திட்டத்தை அமைச்சு மட்டத்தில் முன்னெடுக்கவுள்ளோம் என மலைநாட்டு புதிய கிராம, உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். 
புதிய அமைச்சராக சத்தியபிரமாணம் செய்துகொண்ட பின்னர் தனக்கு கிடைத்திருக்கும் அமைச்சுப் பதவி குறித்து ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையில் அமைச்சர் திகாம்பரம் மேலும் தெரிவித்துள்ளதாவது, மலையகப் பெருந்தோட்ட மக்களின் லயன் வாழ்க்கை முறையை ஒழித்து தோட்டம் என்ற சொல்லுக்கு பதிலாக கிராமங்களாக அவற்றை மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தை அமைச்சு மட்டத்தில் முன்னெடுக்கவுள்ளோம்.

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா ஆட்சியில் 1997ல் உருவாக்கப்பட்டது. அதேபோல 2009ல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஆட்சியில் இல்லாதொழிக்கப்படடது.

இதன்போதும் இதன் பின்னரும் பலர் அந்த அமைச்சுப் பதவிகளை வகித்தார்கள். அது இல்லாமல் ஆக்கப்பட்டபோது யாரும் அதனை மீளப்பெற முயற்சிக்கவில்லை. அந்த அமைச்சு மீள நிறுவப்படவேண்டும் என்பதை நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தேன்.

அதேபோல கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிரிசேனவிடம் பொதுக்கோரிக்கையாக அதனை முன்வைத்து மீளவும் அந்த அமைச்சினை நிறுவினோம். இன்று அதே அமைச்சு எமது கொள்கைத்திட்டங்களுக்கு ஏற்றாற்போல மலைநாட்டு புதிய கிராம, உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சு எனும் பெயரில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மலையக வரலாற்றில் அமைச்சு மட்டத்தில் இந்த மாற்றத்தை கொண்டுவந்துள்ளமை சாதனையாகும். அதேநேரம் இந்திய வம்சாவளி மலையக மக்களுக்கு கிடைத்த கௌரவமாகவும் கொள்ள முடியும். இதனை பெற்றுக்கொடுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஆளும் அரசாங்கத்துக்கு நாம் நன்றிசொல்ல கடமைப்பட்டுளோம்.

தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஒன்றிணைந்த தமிழ் முற்போக்கு கூட்டணி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எந்த வேலைத்திட்டத்தை பிரதானமாக முன்வைத்ததோ அதனை அடையும் வகையில் அமைச்சினைப் பெற்றுக்கொண்டுள்ளது.

எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தேசிய கலந்துரையாடலுக்கான அமைச்சுப் பதவியினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

அதேபோல கூட்டணியின் பிரதித்தலைவர் இராதாகிருஸ்ணனுக்கும் பெறுமதியான அமைச்சுப்பதவியொன்று கிடைக்கவுள்ளது. இவர்களோடு நாம் மேலதிகமாக மூன்று பிரதான மாவட்டங்களுக்குமென மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளோம்.

எனவே தமிழ் முற்போக்கு கூட்டணி எமது மக்களுக்கு பல்வேறு பணிகளை ஒற்றுமையுடன் விட்டுக்கொடுப்புடன் இனிவரும் காலங்களில் கட்சி பேதம் பாராது எமது பணிகளை முன்னெடுப்போம். எமது வெற்றிக்காக பாடுபட்ட அத்தனை பேருக்கும் அதேபோல வாக்களித்த அத்தனை வாக்காளர்களுக்கும் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளொம்.

இந்த வரலாற்று மாற்றத்தை மலையக மக்கள் கொண்டாட வேண்டும். எதிர்வரும் ஐந்து வருடகாலப்பகுதியில் மலையகப் பெருந்தோட்டப் பகுதியில் உள்ள பல்வேறு தோட்டக் குடியிருப்புகள் ´புதிய கிராமங்களாக´ மாற்றப்படும்.

அந்த கனவை நனவாக்க உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை தொடர்ந்தும் எமது கூட்டணிக்கு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.