எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தருக்கு  வாழ்த்து -ஆனந்தசங்கரி

கௌரவ இரா. சம்பந்தன் பா.உ.,  எதிர்க் கட்சித் தலைவர்,

அன்புள்ள சாம்

ANANDASANGAREEநீங்கள் எதிர்க் கட்சி தலைவராக தெரிவானதற்கு எனது வாழ்த்துக்கள். இச்சந்தர்ப்பத்தில் எமது இனப்பிரச்சினைக்கு விரைவான தீர்வை பெறுவதற்கும் தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும்  பூரண ஒத்துழைப்பை கொடுப்பீர்கள் என நம்புகின்றேன். மிக்க நட்புடனும் முற்று முழுதாக மாறுபட்ட சூழ்நிலையிலும் இப்பதவியை ஏற்றுள்ளீர்கள். பல்வேறு அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மிக்க உற்சாகத்துடன் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் கொடுக்கும் வரவேற்புகளைப் பார்த்து எனது மனதை மாற்றி உங்களை வாழ்த்தவும் உங்களுக்கு முழு ஆதரவு கொடுக்கவும் தீர்மானித்தேன்.பிரதம மந்திரி அவர்கள்; சத்தியப் பிரமானம் செய்த வேளையில் முன்னாள் ஜனாதிபதியும் இன்றைய ஜனாதிபதியும் சமூகம் கொடுத்திருந்த நிகழ்வும், சிறிலங்கா சுதந்திர கட்சியின் 64ம் ஆண்டு விழாவின்போது இன்றைய ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியும் அருகருகே அமர்ந்திருந்த காட்சியையும் கண்டு நாம் இருவரும் வெட்கப்பட்டிருக்க வேண்டும். நாம் ஒருவரை ஒருவர் சந்திப்பதில்லை. பேசுவதுமில்லை. எமது மக்களை பாதிக்கும் எந்த முக்கிய விடயங்கள் சம்மந்தமாக கலந்துரையாடுவதுமில்லை. எம் இருவருக்கும் இடையில் வேற எதுவித குரோதமும் இருக்கவில்லை என்றே எண்ணுகின்றேன்.

எனது நேர்மையான அரைநூற்றாண்டுக்கு மேற்பட்ட அரசியல் பூஜ்ஜியத்திற்கு வந்ததற்கு நீங்களே காரணமாக இருந்துள்ளீர்கள். உங்கள் மீது நீண்ட காலமாக இருந்து வந்த கசப்புணர்வைப் பற்றி இச்சந்தர்ப்பத்தில் கூறுவது தப்பில்லை என எண்ணுகின்றேன். எனது இந்த கசப்புணர்வைத் நீக்குவதன் மூலம்,  உங்கள் பாதையில் குறுக்கிடக்கூடிய தடைகள் விலக வாய்ப்புண்டு. நான் ஒரு நேரடி மோதலில் தோற்றவன் அல்ல, ஓர் ஆயுதக் குழுவின் ஆதரவு உங்களுக்கு இல்லாதிருந்தால் எனது அரசியல் பயணம் வெற்றிகரமாகத் தொடர்ந்திருக்கும்;. மக்களும் பயன் அடைந்திருப்பார்கள். கௌரவமான ஓர் அரசியற் கட்சிக்கு பெரும் தீங்கும் ஏற்பட்டிருக்காது. சட்டவிரோதமான ஓர் அமைப்பின், சட்டவிரோதமாகப் பெற்ற உதவிகளாலேயே இன்றும் நீங்களும், உங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தங்கி இருக்கின்றன. அரசு சார்பான இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், சரித்திரத்தின் இப்பகுதியைப்பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். அதேபோலவே, உங்கள் பாராளுமன்ற, உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் தெரிந்திருக்க மாட்டார்கள். ஆனால் நீங்கள் இவற்றை எல்லாம் மறந்திருக்கமாட்டீர்கள் என எண்ணுகின்றேன். 

அன்புடன்,
வீ. ஆனந்தசங்கரி,
செயலாளர் நாயகம்- த.வி.கூ.