23 உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவு-

election.....இரண்டு உள்ளுராட்சி மன்றங்களைத் தவிர 23 உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடைவதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது. புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துரைப்பற்று பிரதேச சபைகள் தொடர்பில் நீதிமனறத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த 2 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப்படவில்லை. ஏற்கனவே பதவிக்காலம் நிறைவடைந்துள்ள உள்ளுராட்சி மன்றங்கள் விசேட ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. உள்ளுராட்சி மன்றங்களுக்கான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், அதற்கமைவாக உள்ளுராட்சி மன்றங்களின் கட்டமைப்பை மாற்றுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்து நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் கலப்பு முறைமையின்கீழ் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதன்பொருட்டு உள்ளுராட்சி மன்றங்களின் எல்லைகள் நிர்ணயிக்கப்பட வேண்டியுள்ளதுடன், அந்த நடவடிக்கைகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் குறிப்பிடுகின்றார். எல்லை நிர்ணயங்களை வர்த்தமான மூலம் பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றிற்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து உள்ளுராட்சி மன்றங்களினால் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.