மஹிந்த பிரதமராகியிருந்தால் பாரியளவில் கொலைகள்-சந்திரிகா குமாரதுங்க-
அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக அதிகாரத்துக்கு வந்திருப்பாரேயானால், இலங்கையில் பாரியளவில் அப்பாவிகள் கொலைசெய்யப்படும் அனுபவம் ஏற்பட்டிருக்கும் என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளயிட்டபோதே இவ்வாறு கூறியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பொலிஸ் ஆட்சியையே நடத்தியிருந்தார் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். தனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு அழுத்தங்களில் இருந்து விடுபடுவதே அவர் மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிக்க முற்பட்டதன் நோக்கம் எனவும் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இலங்கைக்கு இந்தியா மிகவும் விஷேடமானது. முதலீடு உள்ளிட்ட ஏனைய விடயங்களிலும் இந்தியாவின் ஆதரவு எமக்கு தேவை. தெற்காசியாவில் இந்தியாவின் பங்கு, பூகோள ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் கேந்திர முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது, எனவும் கூறினார். மேலும் இங்கு கருத்து வெளியிட்ட சந்திரிகா,
சுதந்திரக் கட்சியின் எந்தவொரு உறுப்பினர்கள் அல்லது தலைவர்களையோ தன்னைச் சந்திக்க மஹிந்த ராஜபக்ஷ அனுமதிக்கவில்லை எனக் குறிப்பிட்டார். சுதந்திரக் கட்சியில் மாற்றுத் தலைவருக்கான தேவை எழுந்தது. நான் சுதந்திரக் கட்சித் தலைமைக்குள் கறைபடியாதவரான மைத்திரிபால சிறிசேனவை தேர்வு செய்தேன் எனவும் சுட்டிக்காட்டினார். இதேவேளை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்பு கொண்டு, பொது எதிரிக்கு எதிராகச் செயற்பட வேண்டியுள்ளதையும் எடுத்துரைத்தேன் என அவர் இதன்போது தெரிவித்தார். அத்துடன் தமிழர்களிடம் நிலங்களை மீள ஒப்படைத்தல், காணாமற்போனோர் விவகாரத்துக்கு தீர்வு காணல், அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்களில் நாம் பணியாற்றுகின்றோம் எனவும், இந்த செயல்முறையில் இந்தியாவும் பங்காற்றும் என்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் கூறியுள்ளார்.