வட்டு. மத்திய கல்லூரி மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது-

v8யாழ் வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியின் புதிய அதிபரை மாற்றுமாறு கோரி மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில் அதிபரை எதிர்வரும் மூன்றுமாத காலப்பகுதியின் பின்னர் மாற்றுவதற்கு நடவடிக்கையெடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து அந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இரண்டாம் தடவையாக கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வகுப்பு பகிஸ்கரிப்பினை மாணவர்கள் மேற்கொண்டனர். இதனையடுத்து வார இறுதி நாட்களான வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்களிலும் கல்வி அமைச்சின் செயலாளரின் பணிப்புரைக்கு அமைய பாடசாலை மூடப்பட்டது.

இதன் பின்பு இன்றுகாலை 9 மணியளவில் பாடசாலை அதிபரின் கடிதமூல வேண்டுகோளின் அடிப்படையில் பிள்ளைகளின் தாய் தந்தையர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஒர் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. இதில் வடமாகாண, கல்வி அமைச்சின் செயலாளர் திரு அ.ரவீந்திரன், மாகாண கல்விப்பணிப்பாளர் திரு செ. உதயகுமார், மாகாணகல்வி உதவிச்செயலாளர் திருமதி சுகந்தி மற்றும் வலயக்கல்விப்பணிப்பாளர் திரு செ.சந்திரராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். 

இக் கூட்டத்திற்கு பொலிஸரும் பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டனர். இதில் முக்கியமாக பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர்கள் சங்கம், பொது அமைப்புக்கள் மற்றும் நலன் விரும்பிகள் இக் கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை. இதனையடுத்து பழைய மாணவர்கள், பொது அமைப்புக்களின் தலைவர்கள் வந்திருந்த போதும் பொலிஸாரினால் தடுத்து வெளியேற்றப்பட்டனர். பல கெடுபிடிகளுக்கு மத்தியில் ஆரம்பித்த கூட்டத்தில் இவ் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு ஒன்றினை தருமாறுகோரி அதிபருக்கு எதிராக பெற்றோர் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரனிடம் இரண்டு முறைப்பாட்டு கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர். 

இக் கூட்டத்தின்போது பெற்றோர்களின் கருத்துக்களினை உள்வங்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தமது கருத்துக்களை ஏற்குமாறு கோரி திணிக்கப்பட்டதாகவும் வந்திருந்த பல பெற்றோர்கள் கூட்டத்தின்போது இடைநடுவில் வெளியேறி இருந்தனார். இதன்போது எவ்வித முடிவுகளும் எட்டப்படாத நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ திரு.சரவணபவன் அவதானம் செலுத்தி இன்று அவர் மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்துள்ளார். இதன்போது பெற்றோர்கள் மத்தியில் குழப்பநிலை நிலவியதுடன் உடனடியாக தமது கோரிக்கைகளுக்கு தீர்வு காணுமாறு அவரிடம் கோரிக்கையை முன்வைத்தனர். இவ்வேளையில் தான் கல்வி அதிகாரிகளுடன் இது தொடர்பாக கலந்துரையாடியதாகவும் இதன்போது கல்வி அமைச்சின் செயலாளர் எதிர்வரும் மூன்றுமாத காலத்தில் குறித்த அதிபரை மாற்ற நடவடிக்கையெடுப்பதாக உறுதியளித்ததாகவும் அவர் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

இன்று விடுமுறை நாள் என்பதனால் நாளை திங்கட்கிழமை புதிய அதிபரினை மூன்று மாத காலத்தின் பின்பு அதாவது நவம்பர் மாத இறுதியில் மாற்றுவதற்கான உத்தியோகபூர்வ கடிதம் வழங்கப்படுமென பெற்றோர்கள் மத்தியில் சரவணபவன் அவர்களால் உறுதியளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பெற்றோரினால் முன்னெடுக்கப்பட்ட ஆரப்பாட்டங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கல்வி அமைச்சரின் செயலாளரிடம் பெற்றோர்களினால் வழங்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக இதற்கு ஒர் குழு அமைத்து விசாரணை செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டதாக தெரியவருகின்றது. (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

v8v9 v11