இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை கலைப்பதற்கு தீர்மானமில்லை-

briberyஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை கலைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியாகியுள்ள அறிக்கை வருமாறு: லஞ்ச ஊழல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழு இவ்வாரம் கலைக்கப்பட உள்ளதாக சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இலஞ்ச ஊழல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவை அமைத்தல் அதற்கான அங்கத்தவர்களை நியமித்தல் மற்றும் நீக்குதல் என்பன 19வது அரசியல் யாப்பின்படி நடைபெறவேண்டும். அதன்படி, இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவை கலைப்பதற்கு அதிகாரம் இல்லை. எவ்வாறானபோதும் அரசியல் யாப்பு சபை அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து சகல ஆணைக்குழுக்களுக்கும் ஆணையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பில் அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்-

aarpattam (2)யுத்தக் குற்ற விசாரணையின்போது இலங்கைக்கு ஆதரவு வழங்க அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக சென்னையில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட முயற்சித்தவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆர்ப்பாட்டகாரர்கள், இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்க தூதரகத்தில் மனுவொன்றையும் ஒப்படைந்துள்ளனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வாஸ் குணவர்த்தன வைத்தியசாலையில் அனுமதி-

vasவர்த்தகர் முஹமட் ஷியாம் கொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையே இவர் சுகயீனமுற்றதாக தெரியவந்துள்ளது. பின்னர் வாஸ் குணவர்த்தன கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளுமெண்டல் துப்பாக்கிச் சூட்டுச் சந்தேகநபர்கள் கைது-

shootingகொழும்பு – புளுமெண்டல் பகுதியில் கடந்த ஜூன் 31ஆம் திகதி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.