தாஜூடினின் கைத் தொலைபேசி நுவரெலிய இளைஞரிடமிருந்து மீட்பு-
கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் றகர் வீரர் வசீம் தாஜூடினின் கையடக்கத் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளது. நுவரெலியா – அக்கரப்பத்தனை பகுதியிலுள்ள இளைஞர் ஒருவரிடமே குறித்த கைபேசி இருந்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். வாகனத்தில் இருந்து தாஜூடினின் சடலம் மீட்கப்பட்ட நாரஹேன்பிட ஷாலிகா விளையாட்டரங்கிற்கு அருகிலுள்ள வரவேற்பு மண்டபம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் குறித்த தொலைபேசியை கண்டெடுத்துள்ளார். பின்னர் அவர் அதனை தன் மகனுக்கு வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. மூன்று வாரங்களுக்கு முன்னர் இரகசியப் பொலிஸாரால் குறித்த கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் ருவன் குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.