புதிய அமைச்சர்கள் கடமைகள் பொறுப்பேற்பு, முதலமைச்சர்கள் பதவிப்பிரமாணம்-

champikaபுதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் இன்று தமது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளனர். பெற்றோல் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர் சந்திம வீரக்கொடி தமது அமைச்சில் இன்று கடமைகளை பொறுப்பேற்றார். இதேவேளை மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். பௌத்த சாசன மற்றும் நீதியமைச்சரான விஜயதாஸ ராஜபக்ஸ இன்று தமது நீதியமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றார். தொழிலமைச்சராக நியமிக்கப்பட்ட டபிள்யூ. டி ஜே செனவிரத்ன தமது அமைச்சின் கடமைகளை, நாரேஹன்பிட்டியில் உள்ள காரியாலயத்தில் பொறுப்போற்றார். கனியவள மற்றும் கனியவாயு அமைச்சராக ஷந்திம வீரகொடி இன்று, கொழும்பு 7இல் அமைந்துள்ள அமைச்சில் தமது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். இதேவேளை, மீன்பிடிதுறை மற்றும் நீரியல்துறை அமைச்சராக பொறுப்போற்ற மகிந்த அமரவீர, மீன்பிடித்துறையின் தொழிநுட்பத்தை மேம்படுத்த உள்ளதாக குறிப்பிட்டார். அத்துடன், துமிந்த திஸாநாயக்க மற்றும் மனோ கணேஷன் ஆகியோரும் தமது அமைச்சு பொறுப்புகளை இன்று ஏற்றனர். இதேவேளை மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் புதிய முதலமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்றுகாலை பதவிப்பிரமானம் செய்துக்கொண்டனர். மேல் மாகாண முதலமைச்சராக இசுர தேவப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார். மஹரகம பிரதேச சபை தலைவராக சில காலம் இருந்த இசுர தேவப்பிரிய, மேல் மாகாண சபைக்கு 1991 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டார். 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற மேல் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டார். மேல் மாகாண முதலமைச்சராக இருந்த பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றத்திற்கு தெரிவானமையால் அந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்வதற்காக இவர் தெரிவு செய்யப்பட்டார். இதேவேளை வடமேல் மாகாண முதலமைச்சராக தர்மசிறி தசநாயக்கவும் பதவியேற்றுள்ளார். வடமேல் மாகாண சபையின் முன்னாள் தவிசாளராக இவர் செயற்பட்டார். முன்னாள் முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர கடந்த பொதுத் தேர்தலில் வெற்றியீட்டி பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள நிலையில் அந்த வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.