யாழ். நீதிமன்ற தாக்குதல், மூவர் பிணையில் விடுதலை-
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூவரை யாழ். நீதிவான் நீதிமன்றம் இன்று பிணையில் விடுவித்துள்ளது. சம்பவம் தொடர்பாகக் கைதாகியவர்களில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 24 சந்தேக நபர்கள் இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போது சந்தேகநபர்கள் மூவரை அவர்கள் மீதான மூன்று வழக்கிலும் தலா 5 லட்சம் ரூபா பெறுமதியான 5ஆட்பிணையில் செல்ல அனுமதித்த நீதிபதி பொ. சிவகுமார், மாதத்தின் இறுதி ஞாயிறுகளில் யாழ். பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடுமாறும் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, ஏனைய 21 சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கடந்த மே மாதம் கைதுசெய்யப்பட்டு தொடர் விளக்கமறியலில் இருந்து வருகின்றார்கள்.
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தன பிணையில் விடுதலை-
தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கம்பஹா பிரதம நீதவான் ரிக்கிரி கே ஜயதிலக்க முன்னிலையில் சந்தேகநபரான முன்னாள் பிரதி அமைச்சர் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சரண குணவர்தன தலா 50 ஆயிரம் ஷரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். பிரதி ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கும் இடையிலான நேரத்தில் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறும் முன்னாள் பிரதி அமைச்சருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொதுத் தேர்தல் காலத்தில் கம்பஹா நீதிமன்றக் கட்டடத் தொகுதி அருகே ஒருவர்மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் சரண குணவர்தன கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்தார்.
வவுனியா பழனிமுருகன் ஆலயத் திருவிழாவில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர் பங்கேற்பு-
அண்மையில் இடம்பெற்ற வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனிமுருகன் ஆலய இறுதி திருவிழாவினில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. சாள்ஸ் நிமலநாதன், திருமதி. சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, திரு. செல்வம் அடைக்கல நாதன் ஆகியோரும், இவர்களுடன் வடமாகாண சபை உறுப்பினர் திரு. ஜி.ரி லிங்கநாதன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.