வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கு இலவச பயிற்சி நெறி-

Youthவடமாகாணத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் பொருட்டு, ´சுற்றுலாத்துறையும் விருந்தோம்பலும்´ எனும் தொனிப்பொருளில் பயிற்சிநெறி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அப்பயிற்சிநெறிக்கான பாடசாலை இன்று யாழ் நகரில் திறந்து வைக்கப்பட்டது. இப்பாடசாலை யாழ். நகர் 3ஆம் குறுக்கு வீதியில் திறந்து வைக்கப்பட்டது. இப்பாடசாலையினை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனும், கனேடிய பல்கலைக்கழக வதிவிட பிரதிநிதி எஸ்தர் மக்டோன்ஸ் மற்றும் வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் தலைவர் எஸ் திலகராஜா ஆகியோர் திறந்து வைத்தனர். கனேடிய பல்கலைக்கழகமும், சர்வோதயமும் இணைந்து குறித்த கற்கை நெறியினை ஆரம்பித்துள்ளனர். நாட்டின் வடமாகாணத்தில் சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்தவற்றின்மீது அதிக தேவைப்பாடு இருக்கின்றது. சர்வதேச ரீதியில் சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்துவரும் நிலையில், போரின் பின்னரான காலப்பகுதியில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி அதிகரித்து வருகின்றது.

வடமாகாணத்தில் பொருளாதாரத்தினை விஸ்தரிப்பதற்கு சுற்றுலாத்துறையினை மேம்படுத்த வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. இந்நிலையில், முதற்தடவையாக யாழ்.மாவட்டத்தில் 100 இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்துடன் இப்பயிற்சிநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சராசரி வருமானத்தினை ஈட்டும் குடும்பங்களின் இளைஞர், யுவதிகளை சுயதொழில் பயிற்சி ஊடாக அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். முற்றிலும் இலவசமாக, சர்வோதயம் மற்றும் கனேடிய பல்கலைக்கழகமும் இணைந்து, மாணவர்களுக்கான இப்பயிற்சி நெறியை வழங்குவதுடன், மாணவர்களுக்கான பயிற்சிக்கால கொடுப்பனவுகள் மற்றும், பயிற்சி உபகரணங்களையும், சுமார் 45லட்சம் ரூபா நிதியில் வழங்கவுள்ளனர். இந்நிகழ்வில், சர்வோதயம் மற்றும், கனேடிய பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.