சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நடைபயணம் ஆரம்பம்-
இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை நடத்துமாறு வலியுறுத்தும் நடைபயணம் கிளிநொச்சியில் இன்று ஆரம்பமானது. கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பமான இந்த நடை பயணத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். முள்ளிவாய்க்காலில் தமது உறவுகளை இழந்த பலரும் இந்த நடைப் பயணத்தில் கலந்து கொண்டிருந்தனர். கிளிநொச்சியில் ஆரம்பமான இந்த நடை பயணத்தின் இன்றைய பயணம் ஆனையிறவில் நிறைவுற்றுள்ளது. சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட இந்த நடை பயணம் ஆனையிறவில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி நாளை பயணிக்கவுள்ளது.
யாழ்ப்பாணம், மன்னாரில் கையெழுத்து வேட்டை-
இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் வகையில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் இன்று நடைபெற்றது. “சர்வதேச மனிதாபிமானம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் செயன்முறைக்கான பொறிமுறையை ஸ்தாபிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்துகின்றோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இதன்போது கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டன. சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கான தமிழர் செயற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து வேட்டை யாழ்ப்பாணத்தில் 7ஆவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று சாவகச்சேரி நகரில் கூடிய பலர் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்திட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மூன்று குடியியல் உறுப்பினர்கள் பரிந்துரைப்பு-
அரசியலமைப்பு சபைக்கான மூன்று குடியியல் உறுப்பினர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சர்வோதய இயக்க தலைவர் ஏ.டி ஆரியரத்ன, கலாநிதி ராதிகா குமாரசுவாமி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சிப்லி அசீஸ் ஆகியோரே பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களை அரசியலமைப்பு சபைக்கு உள்ளீர்க்க எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின்போது யோசனை முன்வைக்கப்படவுள்ளது. இதில் ஏ.டி ஆரியரத்ன மற்றும் ராதிகா குமாரசுவாமி, 100 நாள் அரசாங்க வேலைத்திட்டத்தின்போதும் அரசியலமைப்பு சபைக்கான குடியியல் உறுப்பினர்களாக பரிந்துரை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பேரவைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவும், பிரதமரின் பிரதிநிதியாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதியாக ஜே.வீ.பியின் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனின் பிரதிநிதியாக எம்.ஏ சுமந்திரன் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
அமைச்சரவை அதிகரிப்பை எதிர்த்து மனுத் தாக்கல்-
அரசாங்கத்தின் அமைச்சரவை சட்டவிரோதமானது என உத்தரவிடும்படி கோரி உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி அருண லக்சிறி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். 19வது திருத்தச் சட்டத்தின்படி அமைச்சரவை 30ஆக இருக்க வேண்டும் என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை 30ற்கும் மேலாக அதிகரித்துள்ளதென மனுதாரர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே இது சட்டவிரோதமானதெனவும் அரசியல் யாப்பை மீறியுள்ளதாகவும் அறிவிக்கும்படி மனுதாரர் இதன் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு – குருணாகல் வீதி விபத்தில் நால்வர் பலி-
கொழும்பு – குருணாகல் வீதியில் மினுவாங்கொட யாகொடமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலத்த காயங்களுக்குள்ளான 6பேர் கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து வந்த டிபன்டர் ரக வாகனமொன்று, தனியார் பஸ்ஸை முந்திச் செல்ல முயன்றபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. டிபென்டரில் சென்றோர் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன