அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தொடர்ந்து அழுத்தங்களை கொடுப்போம்-பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன்-

sithadthanதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து புதிய அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்போம் என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் சர்வதேச கைதிகள் தினமாகையால் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டிருந்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

கடந்த அரசு தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறைகளிலே அடைத்து வைத்து வருத்தி வந்தது. இந்த அரசாங்கமாவது தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும். யுத்தம் நிறைவுக்கு வந்து ஆறு வருடங்கள் கடந்திருக்கின்றது. உண்மையில் இந்தக் காலப்பகுதிக்குள்ளேயே இவர்கள் அனைவருமே விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ் மக்கள் அனைவரும் மாற்றத்தை வேண்டி இன்றுள்ள ஜனாதிபதிக்கு பெரும்பான்மையாக வாக்களித்தார்கள். இதனடிப்படையில் இன்று ஒரு மாற்றம் வந்திருக்கின்றது. அரசு மாறியிருக்கின்றது.இந்தக் கைதிகள் அனைவருமே ஒரு பொது மன்னி;ப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரியே நாங்கள் இங்கு இந்த போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றோம். முதல்கட்டமாக தமிழ் மக்கள் தம் உறவுகளை சிறைகளில் இருந்து மீட்பதற்காக தொடர்ந்தும் போராவோம் என்ற ஒரு செய்தியை அரசுக்கு கூறுவதற்காகவே இதனை ஆரம்பித்திருக்கின்றோம். இந்த அரசு நிச்சயமாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அதற்கான அழுத்தங்களை நாங்கள் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருப்போம் என்று தெரிவித்தார்.

இந்த கவனயீர்ப்புப் போராட்டமானது யாழ். மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக இன்றுகாலை 10.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு, ஆஸ்பத்திரி வீதி வழியாக யாழ். கஸ்தூரியார் வீதியை அடைந்து அங்கிருந்து, மின்சார நிலைய வீதி வழியாக மத்திய பஸ் நிலையத்தை அடைந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தேசிய அரசாங்கமே சிறைகளில் வாடும் எமது அரசியல் கைதிகளை விடுதலை செய், அகிம்சைப் போராட்டத்திற்கு மதிப்பளித்து அரசியல் கைதிகளை விடுதலை செய் உள்ளிட்ட பல வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர்.

arpattam