அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்-
சர்வதேச கைதிகள் தினத்தினை முன்னிட்டு இன்று யாழ். நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தேசிய அரசாங்கமே அகிம்சை போராட்டத்திற்கு மதிப்பளித்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய் அரசே, நல்லாட்சி அரசாங்கமே அரசியல் கைதிகளை விடுதலை செய்து நல்லிணக்கத்தை வெளிப்படுத்து, 23 வருட சிறை இருப்பு இன வன்முறையை தோற்றுவிக்கும், இரும்புச் சுவருக்குள் இருக்கும் எமது உறவினை இயல்பாக வாழ விடுதலை செய் போன்ற பதாதைகளை தாங்கியவாறு இன்றுகாலை 10மணியளவில் யாழ். மத்திய பேரூந்து நிலையத்தில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான ஆனோல்ட், கஜதீபன், சுகிர்தன், பரஞ்சோதி மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தொடரும் நடைபயணம்-
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கடந்த 10ஆம் திகதி கிளிநொச்சி நகரிலிருந்து ஆரம்பமான நடைபயணம் இன்று 3ஆம் நாள் பளையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஆணையிறவிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பயணம் பளையுடன் நிறைவுபெற்றது. இந்நிலையில் மூன்றாவது நாள் பயணம் இன்றுகாலை 9 மணியளவில் பளையிலிருந்து யாழ். நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய பயணத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோருடன், காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்டோரும் பங்கெடுத்துள்ளனர்.
மூன்றாவது நாளாக ஆரம்பாகியுள்ள நடைபவனியின் போது கருத்து தெரிவித்த சிவாஜிலிங்கம் அவர்கள், சர்வதேச விசாரணையை வலியுறுத்திய மூன்றாம் நாள் பயணம் பளையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இன்றைய நடைபயணத்தின் முடிவு கொடிகாமம் பகுதி என தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அனந்தி சசிதரன் அவர்கள்,தமது மூன்றாம் நாள் பயணம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தம்முடன் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனோரின் உறவுகளும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தம்முடன் இணைந்துள்ளதாகவும், நாளுக்கு நாள் புதியவர்கள் தமது பயணத்தில் இணைந்து கொள்வதாகவும் தெரிவித்தார். அத்துடன் தமது பயணத்தின் போது மக்கள் பாரிய ஆதரவினை வழங்கி வருதாகவும், சிற்றுண்டிகள், குளிர்பானங்களை தமக்கு வழங்கி ஆதரவு தெரிவித்து வருவதாகவும், தாம் இந்த பயணத்தினை மக்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக முடிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.