புதிய அரசுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பு-கனடா-
இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாக கனடா தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைத் தொடர்ந்தும் வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாகவும் கனடா அறிவித்துள்ளது. கனடாவிற்கான புதிய இலங்கை உயர்ஸ்தானிகர் அஹமட் ஜவாட் மற்றும் கனேடிய ஆளுனர் நாயகம் டேவிட் ஜோன்ஸ்டன் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கையில் நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் உட்பட இலங்கையின் தற்போதைய வளர்ச்சி குறித்து உயர்ஸ்தானிகர் ஜவாட், கனேடிய ஆளுனருக்கு தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், வரலாற்று ரீதியாக இரு நாடுகளிடையே மிகச்சிறந்த உறவு காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அச்சுவேலி பகுதி வாகன விபத்தில் 32 பேர் காயம்-
யாழ். அச்சுவெளி ஆவரங்கால் பகுதியில் இன்றுமுற்பகல் 10மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 32 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 04 சிறுவர்களும் காணப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். பருத்திதுறையிலிருந்து யாழ் நோக்கி பயணித்த பஸ்சுடன் யாழ் நகரிலிருந்து பருத்திதுறைக்கு பயணித்த லொறி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வேகக்கட்டுப்பாடுகளை மீறி வாகனம் செலுத்தப்பட்டதனால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் பொஸிசார் கூறுகின்றனர். இதன்போது லொறிக்குள்ளே காணப்பட்ட பலசரக்கு பொருட்கள் முற்றாக சேதமடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஸி சேனநாயக்க பிரதமரின் ஊடகப் பேச்சாளராக நியமனம்-
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, பிரதமர் அலுவலகத்தின் துணைத் தலைவியாகவும் ரோஸி சேனநாயக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. ரோஸி சேனாநாயக்க, கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் குழு மோதல், ஏழு பேர் காயம்-
கொழும்பு, வாழைத்தோட்டப் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இன்று பகல் இடம்பெற்ற மோதலில் மூன்று பெண்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களுள் பெண்ணொருவர், அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. சில காலங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் ஒன்றிற்கு பழிதீர்க்கும் வகையில் இந்த குழுக்கள் இன்றையதினம் மோதலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழரசு கட்சியின் குழு ஜெனீவா பயணம்-
ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, இலங்கை தமிழரசு கட்சியின் குழு ஒன்று ஜெனீவா சென்றுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் தலைமையில் இந்த குழு அங்கு சென்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை தமிழரசு கட்சியின் சட்டத்தரணிகள் குழு ஒன்றும் உடன்சென்றிருப்பதாக அத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இந்த குழுவுடன் இணையாமல், வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் எதிர்வரும் 20ம்திகதி ஜெனீவா செல்லவிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் சிலிண்டர் வெடித்துச் சிதறி 82 பேர் பலி-
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உணவகம் ஒன்றில் சிலிண்டர் வெடித்ததில் 82 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றுகாலை சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதனால் உணவகக் கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. அருகாமையில் உள்ள சில கட்டிடங்களும் இடிந்து வீழ்ந்ததால், கட்டிட இடிபாடுகளுக்குள் ஏராளமான மக்கள் சிக்கிக்கொண்டனர். ஆரம்பத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 25 என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 82 ஆக அதிகரித்துள்ளது.