Header image alt text

பிரான்சுக்கான இலங்கைத் தூதுவராக திலக் ரணவிராஜா நியமனம்-

embasadorபிரான்சுக்கான இலங்கைத் தூதுவராக நிர்வாக சேவை சிரேஷ்ட உத்தியோகத்தரும், ராஜதந்திரியுமான திலக் ரணவிராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 8ஆம் திகதி பிரான்ஸ் ஜனாதிபதியைச் சந்தித்து தனது உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தைக் கையளித்ததுடன், ஜனாதிபதி மைத்திரிபாலவின் விசேட வாழ்த்துச் செய்தியையும் கையளித்திருந்தார். கடந்த ஜனவரி தொடக்கம் திலக் ரணவிராஜா ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் ஆலோசகர்களில் ஒருவராகக் கடமையாற்றி வந்தார். அதற்கு முன்னர் பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம், ஒழுங்குகமைச்சு, ஊடக மற்றும் தொடர்பாடல் அமைச்சு, சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சு, சமூக நலனோம்பல் அமைச்சு, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு, மஹாவலி அபிவிருத்தி அமைச்சு என்பவற்றின் செயலாளராகக் கடமையாற்றியுள்ளார். அத்துடன் சர்வதேச ரீதியில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியம், ஐக்கிய நாடுகள் பொருளாதார செயற்றிட்டம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு, உலக சுகாதார அமைப்பு என்பவற்றிலும் இவர் ஆலோசகர் தர பதவிகளை வகித்துள்ளார்.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை பதிவுசெய்ய நடவடிக்கை-

UNP (2)நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த பொதுத் தேர்தல் நிமித்தம் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான இந்த கூட்டணியில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜாதிக்க ஹெல உறுமய உள்ளிட்ட பல கட்சிகள் அங்கம் வகித்திருந்தன. இந்த கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக, அதன் பங்காளி கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். இதேவேளை, உள்ளுராட்சி தொகுதிகளை மீள்நிhணயம் செய்வதற்கான அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளநிலையில், அதனை சிறுபான்மை கட்சிகளின் சார்பில் தாமும், அமைச்சர் ரவுப் ஹக்கீமும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அமைச்சர் மனோகணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயம்-

ranil wickramaபிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளையதினம் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இரண்டு தினங்கள் அங்கு தங்கியிருக்கும் அவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இலங்கை தொடர்பில் எதிர்வரும் 30ம் திகதி ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை குறித்து இருவருக்கும் இடையில் பேசப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ராமேஸ்வரத்துக்கும், தலைமன்னாருக்கும் இடையிலான பாலம் அமைத்தல், தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இலங்கை மற்றும் இந்திய பிரதமர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர். இதேவேளை, இந்தியா செல்லும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், தங்களுக்கான மீன்பிடி அனுமதியை உறுதி செய்யும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துமாறு, தமிழக மீனவர்கள் இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவ சங்கங்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளன. இலங்கை கடற்பரப்பில் குறிப்பிட்ட கால வரையறைக்குள் தங்களை மீன்பிடிக்க அனுமதிக்குமாறு அவர்கள் கோரி இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Read more

சர்வதேச விசாரணையை கோரி போராட்டங்கள்-

dfddஇலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளுக்காக சர்வதேச தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்ட பர் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலான நடைபயண பேரணியில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில், சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் போராட்டமும் முன்னெடுக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம், இன்று வவுனியாவில் நடைபெற்றது. இதற்கிடையில், உள்நாட்டு விசாரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்திலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

வடக்கு அமைச்சரவையை மாற்றியமைக்க வேண்டும்-

npc2_CIவடக்கு மாகாண சபையின் அமைச்சரவையை மாற்றியமைக்குமாறு, சபையின் பிரதி அவைத் தலைவர் ம.அன்ரனி ஜெகநாதன், வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரைக் கோரியுள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை அமைக்கப்பட்டு 2 வருடங்கள் ஆகின்றன. சபையின் அமைச்சரவையை முழுமையாக மாற்றியமைக்கவேண்டும். இது வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பலரின் வேண்டுகோளாக இருக்கின்றது. இதனை ஒவ்வொரு உறுப்பினர்களிடமும் நேரடியாகக் கேட்டு அறிந்து கொள்ளலாம். மேலும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவேண்டும். இந்த விடயங்களைக் குறிப்பிட்டு, பிரதி அவைத்தலைவர் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார். கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு முகவரியிடப்பட்டுக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவற்றின் பிரதிகள், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

30வது ஐ.நா மனித உரிமைகள் மாநாடு-

unஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 30வது மாநாடு நாளை ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் குறித்த நிபுணர்களின் அறிக்கை இந்த மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ள நிலையில், இது இலங்கைக்கு முக்கியமான மாநாடாக அமைகிறது. இதில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான உயர்மட்டக் குழு ஒன்று ஜெனீவா சென்றுள்ளது. நாளைய மனித உரிமைகள் மாநாட்டின் ஆரம்ப உரையின்போதும், இலங்கை குறித்த விடயங்களை மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹ{சைன் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், இலங்கை சார்பில் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நாளைய கூட்டத்தின்போது விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக கூறப்படுகிறது. இதன்போது இலங்கையின் உள்நாட்டு பொறிமுறைக்கூடான விசாரணை தொடர்பான முழுமையான விளக்கமளிப்பை அவர் முன்வைப்பார் என்று கூறப்பட்டுள்ளது. Read more