பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயம்-
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளையதினம் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இரண்டு தினங்கள் அங்கு தங்கியிருக்கும் அவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இலங்கை தொடர்பில் எதிர்வரும் 30ம் திகதி ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை குறித்து இருவருக்கும் இடையில் பேசப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ராமேஸ்வரத்துக்கும், தலைமன்னாருக்கும் இடையிலான பாலம் அமைத்தல், தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இலங்கை மற்றும் இந்திய பிரதமர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர். இதேவேளை, இந்தியா செல்லும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், தங்களுக்கான மீன்பிடி அனுமதியை உறுதி செய்யும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துமாறு, தமிழக மீனவர்கள் இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவ சங்கங்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளன. இலங்கை கடற்பரப்பில் குறிப்பிட்ட கால வரையறைக்குள் தங்களை மீன்பிடிக்க அனுமதிக்குமாறு அவர்கள் கோரி இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் இந்த கோரிக்கையை அரசாங்கமும் இலங்கை மீனவர்களும் ஏற்கனவே நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படவுள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தை முன்னிட்டு, அவர்களை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.