சர்வதேச விசாரணையை கோரி போராட்டங்கள்-

dfddஇலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளுக்காக சர்வதேச தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்ட பர் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலான நடைபயண பேரணியில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில், சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் போராட்டமும் முன்னெடுக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம், இன்று வவுனியாவில் நடைபெற்றது. இதற்கிடையில், உள்நாட்டு விசாரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்திலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

வடக்கு அமைச்சரவையை மாற்றியமைக்க வேண்டும்-

npc2_CIவடக்கு மாகாண சபையின் அமைச்சரவையை மாற்றியமைக்குமாறு, சபையின் பிரதி அவைத் தலைவர் ம.அன்ரனி ஜெகநாதன், வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரைக் கோரியுள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை அமைக்கப்பட்டு 2 வருடங்கள் ஆகின்றன. சபையின் அமைச்சரவையை முழுமையாக மாற்றியமைக்கவேண்டும். இது வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பலரின் வேண்டுகோளாக இருக்கின்றது. இதனை ஒவ்வொரு உறுப்பினர்களிடமும் நேரடியாகக் கேட்டு அறிந்து கொள்ளலாம். மேலும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவேண்டும். இந்த விடயங்களைக் குறிப்பிட்டு, பிரதி அவைத்தலைவர் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார். கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு முகவரியிடப்பட்டுக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவற்றின் பிரதிகள், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.