30வது ஐ.நா மனித உரிமைகள் மாநாடு-

unஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 30வது மாநாடு நாளை ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் குறித்த நிபுணர்களின் அறிக்கை இந்த மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ள நிலையில், இது இலங்கைக்கு முக்கியமான மாநாடாக அமைகிறது. இதில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான உயர்மட்டக் குழு ஒன்று ஜெனீவா சென்றுள்ளது. நாளைய மனித உரிமைகள் மாநாட்டின் ஆரம்ப உரையின்போதும், இலங்கை குறித்த விடயங்களை மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹ{சைன் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், இலங்கை சார்பில் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நாளைய கூட்டத்தின்போது விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக கூறப்படுகிறது. இதன்போது இலங்கையின் உள்நாட்டு பொறிமுறைக்கூடான விசாரணை தொடர்பான முழுமையான விளக்கமளிப்பை அவர் முன்வைப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இதேவேளை, யுத்தக்குற்றங்கள் குறித்த அறிக்கையின் இரண்டு பிரதிகள் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கைக்கு எதிர்வரும் 5தினங்களுக்குள் பதில் வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி இந்த அறிக்கை எதிவரும் 30ம் திகதி மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்டு மூன்று மணிநேர விவாதம் இடம்பெறவுள்ளது. இதற்கிடையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சிலரும் ஜெனீவா சென்றுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறிதரன் ஆகியார் அங்கு சென்றுள்ள நிலையில், தற்போது இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, எதிர்வரும் நாட்களில் ஜெனீவா சென்று அவர்களுடன் இணைந்து கொள்வாரென கூறப்படுகிறது. அவர்களுடன் இலங்கை தமிழரசு கட்சியின் சட்டத்தரணிகள் குழு ஒன்று சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் எதிர்வரும் வாரம், உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.