அவுஸ்திரேலிய பிரதமராக மல்கம் டேர்ன்புல் பதவியேற்பு-

malcom turnbulஅவுஸ்திரேலிய பிரதமராக மல்கம் டேர்ன்புல் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். கென்பராவில் ஆளுநர் நாயகம் முன்னிலையில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு நடைபெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் ஆளும் லிபரல் கட்சியின் தலைமைத்துவத்தை டொனி அபொட் இழந்ததை அடுத்து பிரதமர் பதவியிலிருந்தும் நேற்று அவர் விலகியிருந்தார். அவுஸ்திரேலிய பிரதமராக லிபரல் கட்சியின் டோனி அபாட் பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அவரது அரசின்மீது தொடர்ந்து அதிருப்தி நிலவி வந்தது. இந்நிலையில், பொருளாதார ரீதியாக நாட்டை அவர் முன்னேற்ற தவறிவிட்டதாகக் கூறி, மூத்த அமைச்சர் மல்கம் டேர்ன்புல் குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து, அவர்களுள் யாருக்கு அதிக ஆதரவு உள்ளது என்பதைக் கண்டறிய உட்கட்சி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், டோனி அபாட்டுக்கு ஆதரவாக 44 வாக்குகளும், டேர்ன்புல்லுக்கு 54 வாக்குகளும் கிடைத்தன. இதைத் தொடர்ந்து, மல்கம் டர்ன்புல், அவுஸ்திரேலியாவின் 29வது பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும், இந்த வெற்றியை அடுத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட மல்கம் டேர்ன்புல், அவுஸ்திரேலியாவில் சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்காக நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார். லிபரல் கட்சியின் புதிய தலைவரான மல்கம் டர்ன்புல் அவுஸ்திரேலியாவின் 29 ஆவது புதிய பிரதமராவார். புதிய பிரதமராக பதவியேற்றதன் பின்னர் அவர் இன்று லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை அவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பின்னர் லிபரல் தேசிய கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்களையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.