யாழ். பல்கலைக்கழக கலைப்பீட கல்வி செயற்பாடுகள் நிறுத்தம்-

jaffna campusயாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள கலைப்பீடத்தின் மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படும் திகதி பின் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக பதிவாளர் கூறியுள்ளார்.

கிறவுண் மீடியா நெற்வேர்க் செய்தி ஆசிரியர் சுரேந்திரன் சமாதான நீதவானாக நியமனம்-

Surenth JP 01முன்னாள் பிரதி அமைச்சரிடம் இருந்து சமாதான நீதவானாக சுரேந்த் நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார். ஜனநாயக மக்கள் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் அவர்களின் சிபாரிசுக்கமைய பொத்துவில் தமிழ் மெதடிஸ் தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவனும் பேராதெனிய பல்கலைக்கழக வெளிவாரி மாணவனும் CROWN MEDIA NETWORK செய்தி ஆசிரியருமான ச.சுரேந்திரன் (சுரேந்த்) அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார்.

அஸாத் சாலிக்கு தேசியப் பட்டியல் எம்.பி.பதவி வழங்கக் கோரி பேரணி-

asath saliமத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஸாத் சாலிக்கு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற பிரதி நிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மீராவோடையில் பேரணியொன்று நடைபெற்றுள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அஸாத் சாலி சந்தர்ப்பம் கேட்டபோது, தேர்தலில் போட்டியிட வேண்டாம் தேசிப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு ஏற்ப ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காக அவர்களது தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தார். இருந்தும் அவருக்கு கொடுத்த வாக்குறுதி போல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவில்லை. அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று பேரணியில் கலந்து கொண்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நெடுந்தீவு பகுதி மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்-

nedunthivu fishயாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்திற்கு முன்பான இன்று (16) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நெடுந்தீவு பகுதி மீனவர்களால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மீனவர்களுக்கான மானியங்கள் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை என தெரிவித்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது. நெடுந்தீவில் 200 மீனவக் குடும்பங்கள் உள்ள போதிலும், 17 குடும்பத்திற்கு மாத்திரமே மானியங்கள் வழங்கப்படுவதாக இவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சமித் தசநாயக்க பதவியேற்பு-

shamaraஊவா மாகாண சபையின் முதலமைச்சராக சாமர சமித் தசநாயக்க இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் .ஊவா மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஹரின் பெர்னான்டோ கடந்த தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார் .இதனையடுத்து நிலவிய மாகாண சபை முதலமைச்சர் பதவி வெற்றிடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் கையெழுத்து வேட்டை-

campusசர்வதேச விசாரணையை வலியுறுத்தி இன்றுகாலை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தில் கையெழுத்து போராட்டம் ஒன்று நடைபெற்றது. சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் உள்ளக விசாரணைப் பொறிமுறையை நிராகரித்தும் இந்த கையழுத்துப் போராட்டம் இடம்பெற்றது. இப்போராட்டத்தில் பெருமளவான மாணவர்கள் ஊழியர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டு தமது கையொப்பங்களை இட்டுள்ளனர்.

வன்னி விழிப்புலன் அற்றோர் சங்கத்திற்கு வட்டு இந்து வாலிபர் சங்கம் ஊடாக புலம்பெயர் உறவுகள் உதவி-(படங்கள்)

20150914_110942யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு 97க்கு மேற்பட்ட இரு கண்களையும் இழந்தோர், இரு கண்களையும் இழந்த இருபதுக்கு மேற்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் அங்கவீனர்கள் என சுமார் 252 பேருக்கு மேலான விழிப்புலன் அற்ற அங்கவீனர்களைக் கொண்ட “வன்னி விழிப்புலன் அற்றோர் சங்கம்”; பரந்தன் முல்லை சாலையில் இவர்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்காக செயற்பட்டு வருகின்றது. இவ் அமைப்பினால் எமது சங்கத்திடம் இவர்களுக்கான உணவு பொருட்கள் சார்ந்த உதவிகளை தந்துதவுமாறு கேட்டுக்கொண்டனர். இவர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக இன்று உணவுப் பொதிகள் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் வழங்கிவைக்கப்பட்டன. இவர்களின் தேவைக்கான நிதியுதவினை எமது புலம்பெயர் உறவுகளான கனடாவினைச் சேரந்த லோ.கனகாம்பிகை தனது தந்தையின் ஞாபகார்த்தமாக (40000ரூபா) பிரான்ஸை சேர்ந்த செந்தில்நாதன் (25000ரூபா) மற்றும் லண்டனைச் சேர்ந்த பெண் நலன்விரும்பி (20000ரூபா)வினை வழங்கியுள்ளனர். இவ் கருணை உள்ளம் கொண்ட எமது புலம்பெயர் உறவுகளுக்கு மதிப்பான நன்றிகள். இதுவரை காலமும் எமது தாயக உறவுகளின் கண்ணீர் துயர் குறைக்க பல வாழ்வாதார மற்றும் கல்விக்கான உதவிகளை வழங்கிய புலம்பெயர் உறவுகளுக்கும் தாயக உறவுகளுக்கும் மற்றும் முகநூல் நண்பர்களுக்கும் வட்டு இந்து வாலிபர் சங்கம் சார்பில் மீண்டும் மீண்டும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். (வன்னி விழிப்புலன் அற்றோர் சங்கம்)

20150914_11094220150914_111247 20150914_111442 20150914_111533 20150914_111837 20150914_111912 20150914_112233 20150914_112340