போராட்டக்கார்களை சுட உத்தரவிட்டதாக கூறப்படும்அதிகாரி நாடு திரும்பல்-

airportகம்பஹா மாவட்டம் வெலிவேரிய – ரதுபஸ்வலவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டதாக கூறப்படும் இராணுவ அதிகாரி நாட்டுக்கு வந்துள்ளார். இன்று காலை கட்டாருக்கு சொந்தமான விமானம் ஒன்றில் அவர் நாட்டை வந்தடைந்துள்ளார். மேலும் புலனாய்வுப் பிரிவு பாதுகாப்புடன் அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியே அழைத்துவரப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதேவேளை, வெலிவேரிய பிரதேசத்தில் குடிநீர் விஷமாகியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப் பிரதேச மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள ஆணை பிறப்பித்த அதிகாரியை கைதுசெய்யக் கோரி, பூஜித தேரிபெஹெ சிறிதம்ம தேரர் உள்ளிட்ட பிக்குகள் தலைமையிலான ஒரு பிரிவினர் விமான நிலையத்திற்கு முன்பான இன்று எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தார். அத்துடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசித்த, பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன, விமான நிலையத்திலிருந்து பின்கதவால் வெளியேறிவிட்டதாக அறியமுடிகின்றது. அவரை கைதுசெய்யுமாறு கோரி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிக்குகள் தலைமையிலான ஒரு பிரிவினர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ரத்துபஸ்வல தண்ணீர் பிரச்சினை தொடர்பில் வெலிவேரியவில் பொதுமக்கள் நிராயுதபாணிகளாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளுமாறு பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தனவே உத்தரவிட்டார் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன, துருக்கி தூதுவராலயத்தில் கிடைத்த பதவியை ஏற்றுக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார் என்பதுடன் அவரது பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர் இன்று நாடு திரும்பினார். ஸ்தலத்துக்கு விரைந்த இராஜங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, இது தொடர்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவென்பதை ஒருவாரத்துக்குள் அறிவிப்பேன் என கூறியதும், உண்ணாவிரதம் இருந்தவர்கள் அவரது உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு கலைந்துசென்றனர்.