Header image alt text

மரண தண்டனையை அமுல்படுத்தக் கூடாது-மனித உரிமை ஆணைக்குழு-

deadஇலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்தக் கூடாதென, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குற்றச்செயல்களை தடுக்க மரண தண்டனை தீர்வாக அமையாதென சர்வதேச ஆய்வுகளே உறுதிப்படுத்தியுள்ளதாக, ஆணைக்குழுவின் சட்டப்பிரிவு செயலாளர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். மேலும் சமூக, பொருளாதார, கலாசாரம் உள்ளிட்ட காரணிகளே குற்றச்செயல்கள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளதென குறிப்பிட்ட அவர், அதற்கான காரணிகளை கண்டுபிடித்து தீர்வை பெறவேண்டுமே ஒழிய அதற்கு மரண தண்டனை தீர்வாக அமையாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எதிர்த்து வந்த காரணத்தாலேயே மரண தண்டனை, கடந்த 1976ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமுல்படுத்தப்படவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களை தடுக்க மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டுமென பாதிக்கப்பட்டோர் சார்பில் பல்வேறு தரப்பினரால் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், பாராளுமன்ற அனுமதியை பெற்று மரண தண்டனையை அமுல்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. Read more

தனுஸ்கோடி தலைமன்னார் பாதை அமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை-

thanuskodiதனுஸ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான பாதை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. 5.19 பில்லியன் டொலர்கள் முதலீட்டில் இந்த முன்னெடுக்கப்படவுள்ள இந்த வேலைத்திட்டம் குறித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா சென்றிருந்தபோது பல்வேறு தரப்பாலும் பேசப்பட்டிருந்தது. இந்நிலையில் இது குறித்த செயலாளர்கள் மட்ட பேச்சுவார்த்தை அடுத்த மாதம் முதல் நடைபெறவுள்ளன. 22 கிலோமீற்றர் நீளமான இந்த பாதை, பாலங்கள் மற்றும் கடல்அடி சுரங்கங்கள் ஊடாக நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவா அறிக்கை தொடர்பிலான ஆய்விற்கு குழு நியமனம்-

genevaஇலங்கை தொடர்பான ஜெனீவா அறிக்கையை ஆய்வுக்குட்படுத்துவதற்கான குழு ஒன்றை அமைப்பதற்கு சிறீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்ற கட்டமைப்பு குறித்தான அறிக்கை தொடர்பில் நாட்டிலுள்ள தேர்ச்சிபெற்ற சட்டத்தரணிகளின் உதவியுடன் ஒரு வாரத்திற்குள் தீர்மானங்களை அறிவிக் முடியும் என பிரதி அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். உள்ளக பொறிமுறைகளுக்கு விசேடமாக சர்வதேச நுட்பங்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். எனவே குறித்த அறிக்கை தொடர்பில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையை சார்ந்த சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகளும் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னரே சிறீலங்கா சுதந்திரக் கட்சி தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் எனவும் பிரதி அமைச்சர் நிமல் லான்சா சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இந்த விடயம் தொடர்பில் தேவையான இராஜதந்திர நடவடிக்கைகளை ஜெனீவாவிற்கு சென்றுள்ள இலங்கை பிரதிநிதிகள் முன்னெடுத்து வருவதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார். Read more

பரந்தனில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் பகுதியில் அகழ்வு-

policeகிளிநொச்சி பரந்தன் பகுதியில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய இன்று காலை 9.30 மணியளவில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் எவ்வித பொருட்களும் மீட்கப்படவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த இடத்தில் பெருந்தொகையான ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கிளிநொச்சி பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதியால் அகழ்வு செய்;வதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

யுத்தக் குற்றங்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றில் விசாரணை-வீ.ஆனந்தசங்கரி-

ANANDASANGAREEயுத்தக் குற்றங்கள் கலப்பு நீதிமன்றத்திலும் உள்ளக பொறிமுறையின் கீழ் பகுதி பகுதியாக விசாரணை செய்யப்பட வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற விசாரணை முறைமை மற்றும் அமெரிக்காவின் உள்ளக விசாரணை முறைமை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் உள்ள கடும் விளைவுகளைப் பற்றி உணராமல் முன்வைக்கபடுகின்ற கருத்துக்களால் பொதுவான நிலைப்பாட்டினை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணி சர்வதேச கலப்பு நீதிமன்ற விசாரணையை ஏற்றுக்கொண்டாலும், ஒருசில குற்றங்களை அந்த நீதிமன்றத்தில் விசாரிப்பது கடினம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

கலப்பு நீதிமன்றத்திற்கு பதிலாக நம்பகத்தன்மையான பொறிமுறை-அமெரிக்கா-

unஇலங்கை தொடர்பில் ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட்ட மனித உரிமை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றத்திற்கு பதிலாக நம்பகத்தன்மையுடனான பொறுப்புகூறல் பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என அமெரிக்கா இன்று தெரிவித்துள்ளது. இலங்கைக்கு ஆதரவளிக்கும் அமெரிக்க தீர்மானம் தொடர்பில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள பிரதியிலுள்ள விடயங்கள் குறித்து அங்கத்துவ நாடுகளின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது. ஹைபிரிட் எனப்படும் கலப்பு நீதிமன்றம் என்ற சொற்பதம் மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்களை உருவாக்கியுள்ளதால் அது மாற்றமடைவதே சிறந்தது என இந்த உத்தியோகபற்றற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற அமெரிக்க தூதுவர் கித் ஹாபர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை சார்பில் ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத்த ஆரியசிங்க இன்று கருத்துக்களை முன்வைத்திருந்தார். கடந்த 14ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆற்றிய உரையின் சுருக்கமாகவே அவரது கருத்துக்கள் அமைந்திருந்தன. Read more