கலப்பு நீதிமன்றத்திற்கு பதிலாக நம்பகத்தன்மையான பொறிமுறை-அமெரிக்கா-
இலங்கை தொடர்பில் ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட்ட மனித உரிமை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றத்திற்கு பதிலாக நம்பகத்தன்மையுடனான பொறுப்புகூறல் பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என அமெரிக்கா இன்று தெரிவித்துள்ளது. இலங்கைக்கு ஆதரவளிக்கும் அமெரிக்க தீர்மானம் தொடர்பில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள பிரதியிலுள்ள விடயங்கள் குறித்து அங்கத்துவ நாடுகளின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது. ஹைபிரிட் எனப்படும் கலப்பு நீதிமன்றம் என்ற சொற்பதம் மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்களை உருவாக்கியுள்ளதால் அது மாற்றமடைவதே சிறந்தது என இந்த உத்தியோகபற்றற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற அமெரிக்க தூதுவர் கித் ஹாபர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை சார்பில் ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத்த ஆரியசிங்க இன்று கருத்துக்களை முன்வைத்திருந்தார். கடந்த 14ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆற்றிய உரையின் சுருக்கமாகவே அவரது கருத்துக்கள் அமைந்திருந்தன.இதற்கமைய உண்மையை கண்டறியவும், நீதியை நிலைநிறுத்தவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், காணாமற்போனவர்கள் தொடர்பிலான சட்ட பாதுகாப்பை வழங்கவும், இழப்பீடுகளை வழங்கவும் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் குறித்து இதன்போது தெளிவூட்டப்பட்டன. இதற்காக அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், இராஜதந்திர துறையைச் சார்ந்தவர்கள், சர்வதேச அமைப்புக்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் ஒத்துழைப்பு பெறப்படவுள்ளதாகவும் ரவிநாத்த ஆரியசிங்க கூறியுள்ளார். இந்த செயற்பாடுகளுடன் அக்கறையுள்ள புலம்பெயர்ந்தவர்களும் இணைந்துகொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.