ஜெனீவா அறிக்கை தொடர்பிலான ஆய்விற்கு குழு நியமனம்-
இலங்கை தொடர்பான ஜெனீவா அறிக்கையை ஆய்வுக்குட்படுத்துவதற்கான குழு ஒன்றை அமைப்பதற்கு சிறீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்ற கட்டமைப்பு குறித்தான அறிக்கை தொடர்பில் நாட்டிலுள்ள தேர்ச்சிபெற்ற சட்டத்தரணிகளின் உதவியுடன் ஒரு வாரத்திற்குள் தீர்மானங்களை அறிவிக் முடியும் என பிரதி அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். உள்ளக பொறிமுறைகளுக்கு விசேடமாக சர்வதேச நுட்பங்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். எனவே குறித்த அறிக்கை தொடர்பில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையை சார்ந்த சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகளும் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னரே சிறீலங்கா சுதந்திரக் கட்சி தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் எனவும் பிரதி அமைச்சர் நிமல் லான்சா சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இந்த விடயம் தொடர்பில் தேவையான இராஜதந்திர நடவடிக்கைகளை ஜெனீவாவிற்கு சென்றுள்ள இலங்கை பிரதிநிதிகள் முன்னெடுத்து வருவதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இலங்கைக்கு ஆதரவளிக்கும் அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகளிடம் இன்று கருத்துக்கள் கேட்டறியப்படவுள்ளன. ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள பிரதிநிதிகளிடம் அமெரிக்க தீர்மானத்தின் பிரதிகள் கையளிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தில் 26 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஜெனீவா மனித உரிமைகள் விசாரணை அறிக்கை தொடர்பில் இலங்கை வெளியிட்டுள்ள சாதகமான பதிலை அமெரிக்கா தமது தீர்மானத்தில் வரவேற்றுள்ளது. பக்கச்சார்பற்ற மனித உரிமை விசாரணை, நீதியை நிலைநிறுத்துவதற்கான பொறிமுறை மற்றும் காணாமற்போனவர்கள் தொடர்பில் ஆழமாக ஆராய்வதற்காக இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனை ஆகியவற்றுக்கு அமெரிக்கா பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகளுக்கு அமைய அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு சீனாவும் ரஷ்யாவும் ஆதரவினை தெரிவிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை காலமும் சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் ஏனைய நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாத நிலையில் தொழில்பட்டு வந்ததாக ஆங்கில வாராந்தர செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னர் அமெரிக்காவினால் ஜெனீவாவில் முன்வைக்கப்பட்ட இலங்கை தொடர்பான மனித உரிமை விடயத்தில் அமெரிக்காவிற்கு எதிராகவே இந்த நாடுகள் செயற்பட்டன. இந்நிலையில், இலங்கை விடயங்கள் தொடர்பான வாக்கெடுப்புகள் இந்த மாத இறுதியில் மேற்கொள்ளப்படும் போது சீனாவும், ரஷ்யாவும் வாக்களிப்பில் பங்குகொள்ளாமல் நடுநிலை வகிப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இலங்கையின் நட்பு நாடுகள் வாக்களிப்பின் போது இலங்கை சார்பாக செயற்படும் என நம்பிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.