யுத்தக் குற்றங்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றில் விசாரணை-வீ.ஆனந்தசங்கரி-

ANANDASANGAREEயுத்தக் குற்றங்கள் கலப்பு நீதிமன்றத்திலும் உள்ளக பொறிமுறையின் கீழ் பகுதி பகுதியாக விசாரணை செய்யப்பட வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற விசாரணை முறைமை மற்றும் அமெரிக்காவின் உள்ளக விசாரணை முறைமை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் உள்ள கடும் விளைவுகளைப் பற்றி உணராமல் முன்வைக்கபடுகின்ற கருத்துக்களால் பொதுவான நிலைப்பாட்டினை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணி சர்வதேச கலப்பு நீதிமன்ற விசாரணையை ஏற்றுக்கொண்டாலும், ஒருசில குற்றங்களை அந்த நீதிமன்றத்தில் விசாரிப்பது கடினம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோன்று எல்லா யுத்தக் குற்றங்களையும் உள்ளக நீதிமன்றத்தில் விசாரிப்பதும் சாத்தியமற்றது என வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் பிரச்சினையற்ற சில விசாரணைகளை தவிர்ந்த ஏனையவை ஒவ்வொன்றும் தனித்தனியாக எந்த நீதிமன்றம் விசாரிக்கவேண்டும் என்பதை ஒரு விசேட அமைப்பு மூலம் அந்தந்த நீதிமன்றத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என அவர் யோசனை முன்வைத்துள்ளார். சித்திரவதையால் ஏற்பட்ட கொலைகளை கலப்பு நீதிமன்றங்களே விசாரிக்க வேண்டும் எனவும் ஏனையவற்றை உள்ளக விசாரனை முறைமையில் விசாரிக்க முடியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மரண தண்டனை தீர்வாக வரவேண்டிய குற்றங்களை கலப்பு நீதிமன்றம் மூலம் விசாரிப்பதே மிகவும் பொருத்தமாக அமையும் எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். சில விசாரணைகளுக்கு போதிய சட்டங்கள் இல்லாத பட்சத்தில், சட்டங்களை வலுவூட்டக்கூடிய புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.