மறுக்கப்பட்ட திருவிழா நிகழ்வு, வடலியடைப்பு கிராம மக்கள் கையொப்பமிட்டு மகஜர் சமர்ப்பிப்பு-

2யாழ். வடலியடைப்பு பகுதியில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தின் இரவு நேர பூங்காவன நிகழ்வின்போது அங்கு வருகை தந்திருந்த காவல்துறையினரால் குறித்த நிகழ்வு இடைநிறுத்தப்பட்டு பல இலட்சம் ரூபாய் செலவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலாச்சார நிகழ்வுகளும் இரத்துசெய்யப்பட்டது. நிகழ்ச்சியை தொடர்ந்தால் கைதுசெய்ய நேரிடும் என்று பொலிஸார் எச்சரித்துமுள்ளனர். இதன் காரணமாக பரிசில் பெற வந்த சிறார்கள் மனவேதனை அடைந்தது மாத்திரமன்றி வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட கலைஞர்கள் மற்றும் உள்ளுர் கலைஞர்களை நிகழ்விற்கு அழைத்து அவர்களை அவமானப்படுத்தியபோல் இது அமைந்திருந்தது. இவ்விடயம் தொடர்பில் ஆலய பிரதம குரு, விழாவின் உபயகாரர்கள், பொதுமக்கள், ஊர்ப் பிரமுகர்கள் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களைச் சந்தித்து முறையிட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இவ்விடயத்தை உடன் இளவாலை காவல்நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன், இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார். அத்துடன் அக் கிராம மக்கள் ஒன்றிணைந்து தமக்கு நீதி வேண்டி கையொப்பமிட்டு பல தரப்பினருக்கு மகஜர் சமர்ப்பித்துள்ளனர்.