இந்திய படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்-

jaffnaஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் இன்றுகாலை 7.30 மணியளவில் யாழ். மாவட்ட மீனவர்களினால் யாழ். கடற்தொழிலாளர் நீரியல் வள திணைக்களத்தின் முன்பாக முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் சமாசங்களைச் சேர்ந்த மீனவச்சங்கங்களின் தலைவர்கள் மற்றும் மீனவர்கள் பங்கேற்றுள்ளனர். அத்துடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் யாழ்.ஆஸ்பத்திரி வீதியூடாக யாழ். மாவட்ட செயலகத்திற்குச் சென்று அரச அதிபர் வேதநாயகனிடம் மகஜர் ஒன்றை கையளித்து அதன்பின்னர் இந்திய துணைத் தூதரகத்திற்கு சென்று துணைத்தூதுவர் நட்ராஜிடம் மகஜர் ஒன்றும் கையளித்துள்ளனர்.

யாழ். நீதிமன்றத் தாக்குதல், மூவர் பிணையில் விடுதலை-

jaffna courtsயாழ். நீதிமன்றத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களில் மூவருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் 18 பேரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பெ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். பிணையில் விடுவிக்கப்பட்ட மூவரையும் தலா 5 லட்சம் பெறுமதியான 5 ஆட்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் ஏனைய 18 நபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த மே மாதம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட நிலையில் உரிய விசாரணை நடத்தக் கோரி யாழ். நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது யாழ். நீதிமன்றம் தாக்கப்பட்ட நிலையில் சந்தேகத்தின்பேரில் 150க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் தொழிற்பயிற்சிகளுக்கு ஜேர்மன் ஒத்துழைப்பு-

germanyஇலங்கையின் தொழிற்பயிற்சிகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்குவதாக ஜேர்மன் உறுதியளித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் பிரான்க் வோல்டர் ஸ்டெய்ன்மியர் நேற்று கிளிநொச்சி அறிவியல் நகருக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டுவரும் தொழிற்பயிற்சி கட்டட தொகுதியை பார்வையிட்டார். இதன்போது கருத்து வெளியிட்ட ஜேர்மன் அமைச்சர், தமது அரசாங்கம் இலங்கையில் 11 தொழிற்பயிற்சி நிலையங்களை அமைத்துவருவதாக கூறியுள்ளார். தேசிய திறன்விருத்தி இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார, வட மாகாண கல்வி அமைச்சர் டி.குருகுலராஜா உள்ளிட்டோரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை, ஜேர்மன் அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் தாம் மீண்டும் ஜேர்மனுக்கு சென்ற பின்னர் இலங்கை வெள்விவகார அமைச்சுடன் இணைந்து ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக்கொடுப்தற்கு தேவையான நடவடிக்கையெடுப்பதாக அவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

சிறுமியர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து பேரணி-

arpattamசிறுமியர் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், பால் நிலை வன்கொடுமைகளைக் கண்டித்தும், வித்தியா, ஜெருஷா, சேயா போன்ற வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியர்களுக்கு நீதி கோரியும், பெண்கள் சிறுமியர்களுக்கான பாதுகாப்பை வேண்டியும் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு கண்டனப் பேரணியொன்று இன்று நடத்தப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தின் பல்வேறு பெண்கள் அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் தாய்மார் மற்றும் பெண்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். முல்லைத்தீவு மாவட்டத்திலும் அண்மைய வாரங்களில் இத்தகைய பாலியல் வன்முறைகள் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டியுள்ள பெண்கள் அமைப்பினர், மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் துறை அலுவலகங்கள் வேலைத் தளங்கள், கிராமப்புறங்கள், நகர்ப்புறங்களிலும் பெண்களினதும் சிறுமியர்களினதும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கோரியும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரிடம் மகஜர் கையளித்துள்ளனர்.

சஜின் டி வாஸ் குணவர்தன பிணையில் விடுதலை-

sachin vassமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது. சஜின் டி வாஸ் குணவர்தன தாக்கல் செய்த பிணை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்கள் சிலவற்றை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் சஜின் டி வாஸ் குணவர்தன கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 200 இலட்சம் ஷரூபா சரீரப் பிணையிலும், 10 இலட்சம் ஷரூபா ரொக்கப் பிணையிலும் அவரை விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் குற்றத் தடுப்பு திணைக்களத்திற்கு பிரசன்னமாகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல்களை விடுக்கும் பட்சத்தில், சஜின் டி வாஸ் குணவர்தனவை மீண்டும் கைது செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிப் பிரயோகம்;, சந்தேகநபர் காயம்-

gun shootingகொழும்பு, கடுவெல நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று முற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சந்தேகநபர் ஒருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் கடுவலை ரணால பகுதியைச் சேர்ந்த 32 வயதான குறித்த சந்தேகநபர் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார். சமயா என்றழைக்கப்படும் கருண உதயங்க எனும் இந்த சந்தேகநபருக்கு எதிராக கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் நான்கு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. அவர்களில் மூன்று வழக்குகள் கொலைகளுடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்

பதில் அமைச்சர்கள் இருவர் பதவிப் பிரமாணம்-

asst ministersருவன் விஜேவர்த்தன மற்றும் அநுராத ஜயரத்ன ஆகியோர் பதில் அமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன் விஜேவர்த்தனவும் பதில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அநுராத ஜயரத்னவும் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.