சேயா சதெவ்மி கொலைச் சந்தேகநபர் குற்ற ஒப்புதல்-

seya sadevmiகொட்டதெனியாவ சிறுமி சேயா சதெவ்மியை கொலை செய்தது தாம் என நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒப்புக் கொண்டுள்ளார். கம்பஹா பெம்முல்லையில் சந்தேகநபர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தி அவரை தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான உத்தரவு பெற்ப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சிறுமி சேயா சதெவ்மியின் கொலை தொடர்பில் ஏற்கனவே இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். குறித்த சந்தேகநபர்கள் இருவரும் சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜெயகொடி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கல்வியமைச்சில் தமிழ்மொழிக்கு தட்டுப்பாடு-ஜோசப் ஸ்டாலின்-

stalinகல்வியமைச்சில் நடைபெறும் கூட்டங்கள், செயலமர்வுகளின்போது தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இலங்கையில் 97 கல்வி வலயங்கள் உள்ளன. அதில், 24 கல்வி வலயங்கள் முழுமையான தமிழ் கல்வி வலயங்களாகும். எனினும், கல்வியமைச்சில் நடைபெறும் கூட்டங்கள், செயலமர்வுகள் தமிழ்மொழி மூலம் நடைபெறுவதில்லை. இச்செயலை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் கல்வியமைச்சில் நடைபெற்ற 1,000 பாடசாலைகள் தொடர்பான கலந்துரையாடலின் போது தமிழ்மொழி மூலம் எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை. தமிழ்மொழி மூலம் சுற்றறிக்கைகளும் வழங்கப்படவில்லை. சுற்றறிக்கைகள் தமிழ்மொழி மூலம் வெளியிடப்பட்டாலும் அது காலம் தாழ்த்தியே வெளியிடப்படுகின்றது. இலங்கையில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளபோதும், கல்விச் செயற்பாடுகளின் போது அவற்றை கடைப்பிடிக்காது தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவது கவலைக்குரிய விடயமாகும். எதிர்காலத்தில் கல்வி சார் நடவடிக்கைகளிலாவது தமிழ்மொழிக்கும் முன்னுரிமை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.