புத்திக்க பத்திரணவிடம் குற்றப் புலனாய்வினர் விசாரணை-

budhdhikaஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரணவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. இராணுவத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறையற்ற கொடுக்கல் வாங்கல் குறித்து புத்திக்க பத்திரண வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டார். இதன்போது, இராணுவத்திற்கு உணவு விநியோகிக்கும் போது மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் மேஜர் ஜெனரல் மற்றும் ஜெனரல் ஆகியோர்மீதே தாம் குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும் புத்திக்க பத்திரண குறிப்பிட்டார். மேலும், குறித்த நபர்களை அவர்களது பிரிவுகளிலிருந்து இடமாற்றம் செய்யவேண்டும் எனவும் இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டு பயணங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை-

parliamentபண விரயத்தை தடுக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு பயணங்களை மட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அத்துடன், அத்தியாவசியமான பயணங்களுக்காக செல்லும் அரச அதிகாரிகளின் எண்ணிக்கை குறைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்ததாகவும், கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.