மெக்கா அருகே கூட்டநெரிசலில் சிக்கி 300ற்கும் மேற்பட்டோர் பலி-

makkaமெக்கா அருகே மினாவில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்வடைந்துள்ளது. இன்றைய தினம் (ஹஜ் பெருநாள்) பக்ரீத் பண்டிகையை முஸ்லிம்கள் கொண்டாடி வருகின்ற நிலையில், இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரான மெக்காவிற்கு இவ்வாண்டிற்கான ‘ஹஜ்’ பயணம் இன்று தொடங்கியது இந்நிலையில், இன்று ஹஜ் புனித வழிபாட்டிற்காக இலட்சக்கணக்கானோர் குவிந்தது காரணமாக மெக்கா மசூதி அருகே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மினாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 150 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்று முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியிருந்தன. நெரிசலில் சிக்கி 400 பேர் வரை காயம் அடைந்ததாக சவுதி அரேபியத் தொலைக்காட்சி தகவல் வெளியிட்டது. இதற்கிடையே, காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மினாவில் சாத்தான் சுவர்மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்றும் இதன்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 300ற்கும் மேல் என கூறப்படுகின்றது.