அனுமதிப் பத்திரமற்ற யாழ் கொழும்பு சேவைக்கான பஸ்களுக்கெதிராக வழக்கு-

busயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி அனுமதிப்பத்திரம் இன்றி பயணிக்கும் பஸ்கள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் 90 பஸ்கள்மீது இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பொலிஸ் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் தெரிவித்துள்ளார். அனுமதி பத்திரம் இன்றி பயணிக்கு பஸ்களுக்கு தற்போது விதிக்கப்படும் 1000 ரூபா அபராதம் போதுமானது அல்லவென தெரிவித்துள்ள போக்குவரத்து அமைச்சர் அபராத தொகையை ஒரு இலட்சம் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை திருத்தியமைப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். வவுனியாவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பஸ் தரிப்பிடத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிடச் சென்றபோதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். பிரபல அரசியல்வாதிகள் மற்றும் உயர் அரச அதிகாரிகள் மற்றும் அவர்களின் மனைவி பிள்ளைகளின் பெயர்களில் அனுமதி பத்திரங்களை பெற்று பல பஸ்கள் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையில் சேவையில் ஈடுபடுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் சில தற்காலிக அனுமதிப்பத்திரங்கள் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் கூறியுள்ளார். இவ்வாறு போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள் தொடர்பில் யாருடைய அச்சுருத்தலுக்கும் அடிபணியாது சோதனைகளை மேற்கொள்ளுமாறு வவுனியா பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிக்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆலோசனை வழங்கியுள்ளார்.