துஷ்பிரயோகங்களுக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்-

weeeeபாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபடும் நபர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க ஜனாதிபதி நடவடிக்கையெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட விசேட தேவையுடையவர்கள் கவன ஈர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடாத்தியுள்ளனர். மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட வவுணதீவு சந்தியில் இருந்து, வவுணதீவு பிரதேச செயலகம் வரையில் விசேட தேவையுடைவர்கள் பங்குகொண்ட ஊர்வலம் நடைபெற்றது. மண்முனை மேற்கு பிரதேசத்துக்குட்பட்ட விசேட தேவையுடையவர்களை ஒருங்கிணைத்த வாழ்வகம் அமைப்பினால் இந்த கவனஈர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது. பெருமளவான விசேட தேவையுடையவர்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகளே ஆஜராகாதீர்கள், நல்லாட்சியில் இவ்வாறான கயவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும், அரசியல்வாதிகளோ கொலையாளிக்கு சார்பாக செயற்பாடாதீர்கள் போன்ற கோசங்களை இவர்கள் எழுப்பிச்சென்றனர். இந்த பேரணி பிரதேச செயலகத்தினை சென்றடைந்ததும் அங்கு பிரதேச செயலக கணக்காளர் கே. ஜெகதீசனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கான மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதேச செயலக முன்றிலில் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சேயா மற்றும் புங்குடுதீவு மாணவி வித்யா ஆகியோரின் படுகொலையினை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது. இதன்போது துஸ்பிரயோகங்களுக்கு எதிராக பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டதுடன் போராட்டத்தில் கலந்துகொண்டோர் பல்வேறு சுலோகங்கள் கொண்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.