யாழில் 6 மாதங்களில் 27 சிறுவர் துஷ்பிரயோகங்கள்-

abuse (5)யாழ்ப்பாணத்தில் 27 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம் மாவட்ட சிறுவர் அலுவலக மேம்பாட்டு அதிகாரி வி.கௌதமன் தெரிவித்துள்ளார். இன்றுகாலை இடம்பெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், யாழ் மாவட்டத்திலே கடந்த 06 மாதங்களில் 27 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ் மாவட்டத்தின் பிரதேச செயலகத்திற்கு பொறுப்பாகவுள்ள அலுவலகர்களிடம் இருந்து தரவுகள் கிடைத்துள்ளன. கடந்த 03 வருடங்களில் 167 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாக பதிவுகள் குறிப்பிடுகின்றன. அந்தவகையில் 2013 ஆம் ஆண்டு 71 துஷ்பிரயோகங்களும் 2014ம் ஆண்டு 69 துஷ்பிரயோக சம்பவங்களும் 2015 ஆம் ஆண்டு ஜூன்மாதம் வரை 27 துஷ்பிரயோக சம்பங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. யாழ் மாவட்டத்தில் இளம் வயது திருமணம் மற்றும் இளம் வயது கர்ப்பம் என்பன தொடர்பில் கடந்த 2013ம் ஆண்டு 104 சம்பவங்களும், 2014ம் ஆண்டு 83 சம்பவங்களும், 2015ம் ஆண்டு ஜூன் மாதம் வரை 29 சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் யாழ் மாவட்டத்திலே கடந்த 2009ம் ஆண்டு ஆயிரத்து 17 சிறுவர்களும் 2014ம் ஆண்டு ஆயிரத்து 71 சிறுவர்களும் 2015ம் ஆண்டு ஐனவரி மாதம் வரை ஆயிரத்து 156 சிறுவர்களும் சிறுவர் இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

மண்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு-

land slideநுவரெலியா, கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட கொத்மலை – ரம்பொடை வெதமுல்ல பிரிவு லிலிஸ்லேண்ட் (கயிறுகட்டி) தோட்டத்தில் நேற்று இடம்பெற்ற பாரிய மண்சரிவில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களது சடலங்கள் கொத்மலை வைத்தியசாலையில் இருந்து பிரேதப் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மீட்பு பணியாளர்களால் நேற்று இரவு வரை 6 சடலங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் இன்றுகாலை இரண்டு வயதுடைய சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த லோகநாயகி (48 வயது), காந்திமதி (23 வயது), புவனா (6 வயது), லட்சுமி (67 வயது), சுபானி (9 வயது), மனோஜ் (4 வயது), ஷரூபினி (2 வயது) ஆகியோரே இவ்வாறு பலியாகியுள்ளனர். மேலும் இரு கால்களும் உடைந்த நிலையில் செல்லையா கணேசன் (வயது 55) என்பவர் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரியவருகிறது. இவ் அனர்த்தத்தில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று பிற்பகல் 02.45 அளவில் இடம்பெற்ற இந்த பாரிய மண்சரிவில் 7 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. பாராங்கற்களுடன் கூடிய மண், வீடுகளை உடைத்துக்கொண்டு முன்பக்கமாக வந்திருக்கின்றன. மண்சரிவு அபாயத்தினால் குறித்த பகுதியில் உள்ள 45 குடும்பங்களைச் சேர்ந்த 188 பேர் இடம்பெயர்ந்து இறம்பொடை இந்து கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கான நிவாரண உதவிகளை நுவரெலியா மற்றும் கொத்மலை பிரதேச சபைகள் முன்னெடுத்து வருகின்றன. அத்தோடு, மண்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு அண்மித்த பகுதியில் உள்ள பாரிய மண்மேடு சரிந்துவிழும் ஆபத்து காணப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.