சர்வதேச விசாரணையை கோருவதற்கு இலங்கை அரசுகளே காரணம்-
யாரையும் பழிவாங்கும் எண்ணம் எமக்கில்லை. பழி வாங்குவதனால் பிரச்சினைகள் தீர்ந்துவிடப்போவதில்லை. உண்மைகள் வெளியில் கொண்டுவரப்படவேண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். இந்த நாட்டில் யுத்தம் ஏன் ஏற்பட்டது என்பது கண்டறியப்பட்டு அதற்கான நியாயம் கிடைக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், கடந்தகால இலங்கை அரசுகளின் போலித்தனமான செயற்பாடுகளினால் தான் சர்வதேச விசாரணையொன்றை கோரி நிற்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவருடனான நேர்காணல் வருமாறு,
கேள்வி- கடந்த ஜனவரி 8 ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் நல்லாட்சி யுகம் ஆரம்பித்திருக்கிறது என்று ஜனாதிபதியும் பிரதமரும் கூறிவருகிறார்கள். இந்த நல்லாட்சி தமிழ் மக்களுக்கு எந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்- ஜனவரி 8 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மீது தமிழ் மக்கள் ஒரு எதிர்பார்ப்பை வைத்தார்கள். அதாவது தங்களுடைய காணிகள் விடுவிக்கப்படலாம், சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படலாம், காணாமல் போனோர் தொடர்பில் அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் உறவுகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கலாம் போன்ற எதிர்பார்ப்புகள் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது.
இவற்றில் காணி விடுவிப்பு முழுமையாக நடைபெறாவிட்டாலும், ஓரளவுக்கு நடைபெற்றது. ஆனால் ஏனைய விடயங்கள் தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் கடந்த ஒன்பது மாத காலப்பகுதியில் ஆரம்பிக்கப்படவில்லை. இருந்தாலும் கூட மைத்திரி- ரணில் அரசாங்கம் மேற்படி விடயங்களை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை எமக்கும் எமது மக்களுக்கும் இருக்கிறது. அதேபோல் நீண்டகால இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படவேண்டும் என்பதே எமது மக்களுடைய அபிலாஷை. இந்த அபிலாஷையை புதிய அரசு நிறைவேற்றவேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு. இருந்தாலும் கூட, தமிழ் மக்களுடைய அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய வகையில் நியாயமான தீர்வொன்று இந்த நாட்டில் கொண்டுவரப்படுமா? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதியாக கொண்டுவந்ததில் தமிழ் மக்களுக்கு காத்திரமானதொரு பங்குண்டு. அத்துடன் அவர்கள், அவர் மீது நம்பிக்கையை வைத்துத்தான் அவருக்கு தங்களுடைய ஆணையை வழங்கியிருந்தார்கள். அவர்களுடைய அந்த நம்பிக்கையை இந்த அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கையிருக்கிறது. அதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
கேள்வி- சர்வதேச அரசியல் அரங்கில் இன்று இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மான அறிக்கை தொடர்பில் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில்- ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையினூடாக இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் பூரணமாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதில் நியாயமான சில விடயங்களையும் அவர்கள் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.
எங்களைப் பொறுத்தவரை யாரையும் பழிவாங்கும் எண்ணம் எமக்கில்லை. பழிவாங்குவதனால் பிரச்சினைகள் தீர்ந்துவிடப்போவதில்லை. உண்மைகள் வெளியில் கொண்டுவரப்படவேண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் இந்த நாட்டில் யுத்தம் ஏன் ஏற்பட்டது என்பது கண்டறியப்பட்டு, அதற்கான நியாயம் கிடைக்கவேண்டும் என்பதே எங்களுடைய எண்ணப்பாடு. இவற்றைத்தான் நாம், இழந்து நிற்கின்ற இலட்சக்கணக்கான மக்களுக்கு செய்யக்கூடிய ஆத்மசாந்தியாக இருக்கும்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் கொண்டுவரப்பட்டுள்ள பரிந்துரைகளை ஏற்று இலங்கை அரசு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு முன்செல்ல வேண்டும். இல்லாவிடில் இவ் அறிக்கையும் கடந்தகால வரலாறுகளைப் போன்று கிடப்பில் போடப்பட்டு விடும். இதுதான் எங்களுடைய நிலைப்பாடு.
எனவே, தமிழ்த் தலைவர்கள் அனைவரும் இவ்விடயத்தில் ஒரே தீர்மானத்துடன் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை கொண்டுவந்த அமெரிக்கா உட்பட்ட நாடுகளுடன் பேசி இதனை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்களை கொடுக்கவேண்டும்.
கடந்தகால இலங்கை அரசுகளின் போலித்தனமான செயற்பாடுகளினால் தான் நாம் இன்று ஒரு சர்வதேச விசாரணையை கோரி நிற்கின்றோம். எனவே, தமிழ்த் தலைவர்கள் அனைவரும் ஒரே அபிப்பிராயத்துடன் பயணித்து இதனை முன்னெடுத்தால்தான் நாம் இதில் வெற்றி காணமுடியும்.
கேள்வி- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய பதிவு விடயம், தொடர்ந்தும் இழுபறியிலேயே இருந்துவருகிறது. இது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு………..
பதில்- தமிழரசுக் கட்சி விரும்பாமையினால் தான் இவ்விடயம் தொடர்ந்தும் இழுபறியில் இருக்கிறது. தமிழரசுக் கட்சி ஒரு பலமான கட்சியாக வரமுடியும். என அவர்கள் நம்புகிறார்கள். இதுதான் காரணம் என நான் கருதுகிறேன்.
ஆனால் இவ்விடயத்தை தூர நோக்கில் பார்க்கின்றபொழுது இது உகந்த விடயமல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் ஒரே குடையின்கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படவேண்டும் என்பதே மக்களுடைய எண்ணம். அவர்களுடைய எண்ணத்தை புரிந்துகொண்டு சம்பந்தப்பட்டவர்கள் இவ்விடயத்தில் விரைவில் கவனமெடுப்பது பொருத்தமானதாக இருக்கும் என்பதே எனது நிலைப்பாடு.
கேள்வி- தமிழர்களுடைய அரசியல் வரலாற்றில் இந்தியாவுக்கும் பெரும் பங்குண்டு. இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பில் இந்தியா மௌனம் காத்து வருகிறது. இது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில்- இந்தியாவைப் பொறுத்தவரை வெளிநாட்டு கொள்கை விடயத்தில் அரசியல்வாதிகளை விட வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகளின் ஆதிக்கம்தான் கூடுதலாக இருக்கின்றது. இந்த அதிகாரிகளின் மத்தியில் அமெரிக்கா கொண்டுவரும் சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கொள்கை இருக்கிறது. இதற்கு காரணம் இன்று இலங்கைக்கு எதிராக கொண்டுவந்த பிரேரணையை நாளை இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்து விடுமோ என்ற அச்சம் அவர்கள் மத்தியில் இருக்கிறது. காஷ்மீர் விவகாரத்தை வைத்துக்கொண்டு தங்களுக்கு எதிராக ஒரு பிரேரணையை கொண்டுவந்து விடுமோ என்ற அச்சம்.
அதாவது தங்களுடைய உள்நாட்டு பிரச்சினைகளில் எந்தவொரு வெளிநாடும் தலையிடக்கூடாது என்பதில் அவர்கள் அக்கறையாக இருக்கிறார்கள். அதன் காரணத்தினால் தான் தமிழ்நாடு எந்தளவுக்கு கொதித்தெழுந்தாலும் அவர்கள் எமது நாட்டின் பிரச்சினைகளில் தலையிடாமல் இருக்கிறார்கள்.
கேள்வி- தமிழ் மக்களுக்கு இன்று இருக்கக்கூடிய பிரச்சினைகளாக நீங்கள் இனம் கண்டிருப்பவை………
பதில்- இன்று தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்ற இரண்டு விடயங்களை சமாந்தரமாக பார்க்கவேண்டும். ஒன்று நிரந்தரமான அரசியல் தீர்வு, இரண்டாவது ஏறக்குறைய 30 வருடங்களாக யுத்தத்தை மாத்திரம் கண்டுவந்த எமது பூமி எந்தவொரு அபிவிருத்தியையும் காணவில்லை. அதனால் வேலையில்லாப் பிரச்சினை, வாழ்வாதாரப் பிரச்சினை என பல பிரச்சினைகளை கொண்டுள்ளது. எனவே இவை சீர்செய்யப்படவேண்டும்.
அதேபோல் முன்னாள் போராளிகள் இன்றுவரை ஓரம் கட்டப்பட்டவர்களாகவே இருந்து வருகிறார்கள். அவர்களுடைய வாழ்வுக்கும் ஒரு வழியேற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும். அவர்கள் சமூகத்துக்குள் உள்வாங்கப்படவேண்டும். இவைதான் இன்று முக்கியமான பிரச்சினைகளாக இருக்கின்றன.
எனவே, தனியே தீர்வு என்ற விடயத்துக்குள் நின்று கொண்டிருப்போமேயானால் சமுதாயம் அழிந்துகொண்டு போய்விடும். ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தினால் தான் தன்னுடைய விடுதலை பற்றி பேசக்கூடியதாக இருக்கும். அல்லது அச்சமுதாயம் வேறு வழிகளுக்குள் சென்றுவிடும். எனவே, நாம் ஆரோக்கியமான சமுதாயமொன்றை உருவாக்கினால்தான் எமது விடுதலைப் பயணத்தை நோக்கி நகரமுடியும்.