ஆட்கடத்தல் தொடர்பான கொள்கையில் மாற்றமில்லை-அவுஸ்திரேலியா-

australiaகடல் வழியாக முன்னெடுக்கப்படுகின்ற ஆட்கடத்தல் தொடர்பிலான தமது அரசாங்கத்தின் கொள்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என கொழும்புக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் வலியுறுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் மெல்கம் டர்ன்புல், நாட்டின் எல்லைப் பாதுகாப்பு விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய படகு மூலம் சட்டவிரோதமாக வருவோரை தடுப்பதற்கு தொடர்ந்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவுஸ்திரேலிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயற்சிப்போர், கைது செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்கோ அல்லது பெப்புவா நியூகினியா மற்றும் நவுரு தீவுகளுக்கோ அனுப்பிவைக்கப்படுவார்கள் எனவும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்கும் எவரும் அவுஸ்திரேலியாவில் குடியேற்றப்பட மாட்டார்கள் எனவும் அந்த அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு மூலம் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமை மேம்படுத்தப்படும்-ஜனாதிபதி-

maithriபுதிய அரசியலமைப்பொன்றை அறிமுகப்படுத்தி நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் 70 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க்கிற்கு சென்றுள்ள ஜனாதிபதி, நியூயோர்க் பௌத்த விகாரையில் கூடியிருந்த இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக புதிய அரசாங்கத்திற்கு சர்வதேச சமூகம் பரியளவில் ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மக்கள் தமக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை மக்களின் நன்மைகருதி உரிய முறையில் பயன்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்பெயின் இரண்டாக பிரிகின்றது-

spainஸ்பெயின் நாட்டின் வடகிழக்கு மாகாணமான கடலோனியாயில் மொத்தமாக 75 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் ஸ்பெயினில் இருந்து சுதந்திரம் பெற்று தனிநாடு ஆக செயல்பட விருப்பம் தெரிவித்து வந்தனர். இதனால் அங்கு பல கட்டப் போராட்டங்கள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து அங்கு வாழும் மக்களிடம் கருத்துக் கணிப்பு நேற்று நடத்தப்பட்டது. அந்த கருத்துக்கணிப்பில், ஸ்பெயினிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக அதிகளவான வாக்குகள் கிடைக்கபபெற்றுள்ளன. அதை தொடர்ந்து கருத்துக் கணிப்பில் பிரிவினைவாதிகள் வெற்றிபெற்றதாக அப்பகுதி ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ள அர்தர்மாஸ் கூறியுள்ளார். மேலும் 2017ம் ஆண்டு முதல் கடலோனியா பகுதி சுதந்திர நாடாக பிரகனடம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதனால் ஸ்பெயின் இரண்டாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஐரோப்பா கண்டத்தில் கடலோனியா என்ற புதிய நாடு உருவாகிறது. இது ஸ்பெயினின் வளம் மிகுந்த பகுதி. தொழிற்சாலைகளும, வர்த்தக நிறுவனங்களும் அதிக அளவில் உள்ளன. இங்குள்ள பார்சிலோனாவில் ஸ்பெயினின் 2ஆவது பெரிய விமான நிலையமுள்ளது. அங்கு காணப்படும் துறைமுகம் 3ஆவது பெரிய துறைமுகமாகும்.

இலங்கை – இந்திய கூட்டு இராணுவ பயிற்சி-

indo sri lankaஇந்தியா-இலங்கைக்கு இடையேயான இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பயிற்சி யுக்திகளை பரிமாறிக் கொள்ளும் வகையிலும் இரு நாடுகளும் பங்கேற்கும் கூட்டு இராணுவ பயிற்சி நாளைமுதல் இரு வாரங்கள் நடைபெறவுள்ளது. புனேயில் உள்ள ஆந்த் இராணுவ முகாமில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் இரு நாட்டு இராணுவ அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். ‘பயிற்சி மித்ர சக்தி-2015’ என்று பெயரிடப்பட்ட இக்கூட்டு பயிற்சி, இரு நாடுகளுக்கும் இடையிலான 3-வது முகாம் ஆகும். இந்த பயிற்சி மூலம் இரு நாட்டு இராணுவத்தின் திறமை பெருகும், புரிதல் தன்மையும், மரியாதையும் அதிகரிக்கும் என்று இந்திய இராணுவத்துறை சார்பில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.சபை வழிகாட்டுதலின்படி தீவிரவாத ஒழிப்பு கூட்டு நடவடிக்கையாக நடைபெறும் இந்த பயிற்சி அடிப்படை உறுதி மற்றும் தன்னம்பிக்கை பெருகவும், எல்லையில் அமைதி, முன்னேற்றம், நிலைத்தன்மை அதிகரிக்கவும் வழிவகுக்கும் எனவும் கூறப்படுகிறது.

வவுனியாவில் சிறுவர்கள் ஆர்ப்பாட்டம்-

vavuniyaதமிழ் அரசியல் கைதிகளாக சிறைச்சாலைகளில் விசாரணைகளின்றியும், விடுதலையின்றியும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது தந்தைமார்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி, வவுனியா செட்டிகுளத்தில் சிறுவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தமது தந்தையர்கள் விடுதலையின்றி சிறைச்சாலைகளில் வாடுவதனால், தமது வாழ்க்கையும் பள்ளிப்படிப்பும் அவர்களின் அரவணைப்பும், பாதுகாப்புமின்றி பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து, அவர்களை விடுதலை செய்ய ஆவன செய்ய வேண்டும் என புதிய அரசாங்கத்திடம் அவர்கள் கோரியிருக்கின்றனர். மேலும் இவர்கள் நல்லாட்சியில் நல்வாழ்வு கிடைக்குமா? சிறுவர் நாமே?, அப்பாவின் நீண்ட சிறையால் வாழ்வை இழந்து தவிப்பது நாமே!, போன்ற சுலோக அட்டைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.