வெளிநாட்டு நீதிபதிகள், இலங்கையின் சட்டத்தின்கீழ் செயற்படவேண்டும்-
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்யும் நீதிமன்றத்தில், வெளிநாட்டு நீதிபதிகளோ நிபுணர்களோ பங்கேற்பார்களாயின், அவர்கள் இலங்கை சட்டத்தின் பிரகாரமே செயற்படவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு பங்கேற்கும் நீதிபதிகள் மற்றும் நிபுணர்களுக்கு, இலங்கை நாடாளுமன்றத்தின் மூலமாகவே அனுமதி வழங்கப்படும் என்றும் இது, இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரமே மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு ஹைட்பார்க்கிலுள்ள சீரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தைநேற்று பொதுமக்களிடம் கையளித்து, அங்கு அமைக்கப்பட்ட இரண்டு மாடி கட்டடத்தை திறந்து வைத்து, உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால பரக் ஒபாமா சந்திப்பு-
அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் 70ம் அமர்வுகளில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் உலகத்தலைவர்களுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமையகத்தில் நேற்று விருந்துபசாரமொன்று வழங்கப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இந்த விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்துபசாரத்திற்கு இடைநடுவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பரக் ஒபாமாவை சந்தித்து கைலாகு செய்து சொற்ப நேரம் பேசியுள்ளார்.
வவுனியா வர்த்தக நிலையத்தில் கொள்ளை-
வவுனியா சூசைப்பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள செல்வம் மோட்டோர்ஸ் வர்த்தக நிலையத்தில் நேற்று இரவு கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்றுகாலை 08.00 மணிக்கு வர்த்தக நிலையத்தை திறப்பதற்கு வந்தபோது எனது கடையின் 08 பூட்டுக்களும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இது தொடர்பாக பொலிஸிற்கு தகவலை வழங்கியதை அடுத்து அவர்களின் உதவியுடன் 700,000 ரூபா பணம் கொள்ளையிடப்பட்டதை அறியக் கூடியதாக இருந்தது வர்த்தக நிலைய உரிமையாளர் கிருபாகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றப்புலனாய்வு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஊடகவியலாளர் பிரகீத் வழக்கு, மனுவை விசாரிக்க அனுமதி-
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில், காவலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் நால்வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில், லுதினர் கர்ணல் சிறிவர்த்தன, கோப்ரல் அனுர ஜெயலால் உள்ளிட்ட நான்கு இராணுவ வீரர்கள் இரகசியப் பொலிஸாரால் நியாயமான காரணம் இன்றி காவலில் வைக்கப்பட்டுள்ளதாக, மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விடயங்களை ஆராய்ந்த மேன் முறையீட்டு நீதிமன்றம் மனுவை விசாரிக்க அனுமதி வழங்கியது. அத்துடன் எதிர்வரும் 9ம் திகதி இது குறித்து தகவல் அளிக்குமாறு இரகசியப் பொலிஸாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.