நிலையான அபிவிருத்தி, நல்லிணக்கத்தை எட்டுவதே இலக்கு—ஜனாதிபதி- 

maithriநிலையான அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் ஆகிய இரட்டைக் காரணிகளை எட்டுவதே இலங்கை அரசாங்கத்தின் இலக்காகும் என ஐக்கிய நாடுகளின் 70 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் நேற்று உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்;டார். இலங்கையில் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கான உடனடித் திட்டங்களையும் அறிமுகப்படுத்துவதற்கு திடசங்கட்பம் பூண்டுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். அத்துடன், நிலையான அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாயின் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் உண்மையாக செயற்பட வேண்டும் எனவும், அப்போதே நவீன இலங்கையை கட்டியெழுப்ப முடியும் என்றும் ஜனாதிபதி கூறினார். கடந்த கால அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு உண்மையைக் கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல், பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் மீண்டும் தவறுகள் நேராமல் இருப்பதை உறுதிசெய்தல் என்பன குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஐ.நா வில் குறிப்பிட்டார். இதேவேளை, அனைத்து வகையான மோதல் வடிவங்கள் மற்றும் பயங்கரவாதம் மனித குலத்திற்கு பேரழிவானவை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார். இந்த அடிப்படையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இலங்கை வெற்றி பெற்றுள்ள போதிலும், ஆசியாவிலிருந்து ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்கா வரையான நாடுகள் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதில் தொடர்ந்தும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக ஜனாதிபதி எடுத்துக்காட்டினார். தேசிய தலைவர்களாகிய அனைவரும், சுய ஒழுக்கத்துடன் கூடிய சமத்துவமான அணுகுமுறைகள் ஊடாக நிலையான அபிவிருத்திகளை அடைந்துகொள்வதற்கான உரிய உடனடித் திட்டங்களை எதிர்காலத்தில் கையாள வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உலகத் தலைவர்களுக்கு யோசனை முன்வைத்தார்.

தேர்தல் முறைமை தொடர்பில் இவ்வருட இறுதியில் தீர்வு-பிரதமர்-

ranil (5)தேர்தல்கள் திணைக்களத்தின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைபவம் ஒன்று நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தேர்தல்கள் ஆணையாளர், கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். தேர்தல்கள் திணைக்களத்தின் 60 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஞாபகார்த்த முத்திரை ஒன்றும் இதன்போது வெளியிடப்பட்டதுடன், திணைக்களத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களும் கௌரவிக்கப்பட்டனர். இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாவது; தேர்தல் முறைமை தொடர்பில் எமக்கு தற்போது மூன்று விடயங்கள் உள்ளன. முதலாவது விருப்பு வாக்கு முறைமையற்ற புதிய தேர்தல் முறையொன்றை உருவாக்குதல். அதன்போது எமக்கு விகிதாசார தேர்தல் முறைமை அல்லது தொகுதிவாரி தேர்தல் முறைமையின் மாதிரிகள் இருக்கலாம். இந்த இரண்டு முறைகளையும் சமாந்திரமாகக் கொண்டு செல்வதா அல்லது நியூசிலாந்து போன்று கலப்பு முறையொன்றுக்கு செல்வதா என்பது தொடர்பில் நாம் ஆராய்வோம். அடுத்த சில மாதங்களில் இது தொடர்பில் கலந்துரையாடி இந்த வருட இறுதியில் தீர்வொன்றை எட்ட முடியும் என்று எதிர்பார்கின்றோம்.

மல்லாவியில் இரண்டு பஸ்கள் மோதி 35பேர் படுகாயம்-

accidentமுல்லைத்தீவு மல்லாவி ஒட்டறுத்தகுளம் பகுதியில் நேற்று இரவு இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 35 பேர் படுகாயமடைந்தனர். கிளிநொச்சியிலிருந்து ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸ{ம் வவுனியாவில் இருந்து பனங்காமம் நோக்கிச் சென்ற பஸ்ஸ{ம் ஒட்டறுத்த குளம் பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் மல்லாவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி சேயா வழக்கு, இரு சந்தேகநபர்கள் விடுதலை-

courts (1)கொடதெனியா பகுதியில் சிறுமி சேயா சவ்தமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இருவர் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் முன்னதாக கைதுசெய்யப்பட்ட 17வயது மாணவன் மற்றும் ஒரு குடும்பஸ்தர் என இருவரையே இவ்வாறு விடுவிக்க மினுவான்கொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்றையதினம் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த இருவரின் டீ.என்.ஏ பரிசோதனை அறிக்கை குற்றத்துடன் ஒத்துப் போகாமையால் அவர்களை விடுவிக்குமாறு, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்-

gggதென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இன்றுகாலை 9.00 மணி தொடக்கம் மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத்தில் அவர்கள் கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டதுடன் அலுவலக தளபாடங்களுக்கும் சேதம் விளைவித்துள்ளனர். கல் வீச்சுத் தாக்குதல் காரணமாக நிர்வாகக் கட்டிடத்தின் நுழைவாயில் கதவுகள் மற்றும் ஜன்னல்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியுள்ளன. நீண்ட நேரம் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக வளாகத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன் கல்வி நடவடிக்கைகளும் அலுவலக செயற்பாடுகளும் முற்றாக முடக்கப்பட்டிருந்தன. பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாணவர் விடுதிகளின் வசதிகளை அதிகரிக்கக் கோரியும் பெண்கள் விடுதிகளின் பாதுகாப்பை அதிகரிக்கக் கோரியுமே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பருத்தித்துறையில் துப்பாக்கி ரவைகளுடன் ஒருவர் கைது-

arrest (2)யாழ் பருத்தித்துறையில் ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்றுமாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. ஆல்வாய் வடக்கைச் சேர்ந்கவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை பருத்திதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் பருத்திதுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.